Last Updated : 28 Dec, 2015 04:49 PM

 

Published : 28 Dec 2015 04:49 PM
Last Updated : 28 Dec 2015 04:49 PM

பிரிட்டனில் ஒருமாத மழை ஒரேநாளில் பெய்தது: சாலைகள் நதிகளாக மாறின

பிரிட்டனின் வடக்குப் பகுதியில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்தது. இதனால் அந்தப் பகுதி சாலைகள் நதிகளாக மாறியுள்ளன.

பிரிட்டனின் வடக்குப் பகுதியில் யார்க்சயர், லங்காசயர் மாகாணங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள கியூஸ், பாஸ் ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

சுமார் 800 ஆண்டுகள் பழமையான யார்க் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நதியோரத்தில் இருந்த கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இரு மாகாணங்களிலும் சுமார் 350-க்கும் மேற்பட்ட நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். மீட்புப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பிரிட்டன் வானிலை மைய அதிகாரிகள் கூறியபோது, சில பகுதிகளில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை கடந்த சனிக்கிழமை ஒரேநாளில் பெய்துள்ளது, இதுவே வெள்ளப் பெருக்குக்கு காரணம் என்று தெரிவித்தனர்.

கனமழையால் யார்க்ஸயர், லங்காஸயர் மாகாணங்களில் முக்கிய சாலைகள் நதிகளாக காட்சியளிக்கின்றன. ராணுவ வீரர்கள் படகுகளில் வீடு வீடாக சென்று வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை மீட்டு வருகின்றனர்.

சாலை, ரயில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு பிரிட்டனில் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக ஸ்தம்பித்துள்ளது.

அமெரிக்காவில் 43 பேர் பலி

அமெரிக்காவின் தென்மேற்கு, மத்தியமேற்குப் பகுதிகளில் கடும் சூறாவளி வீசி வருகிறது. இதனால் மிசோரி, இலியோனிஸ், டெக்சாஸ், நியூமெக்ஸிகோ உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

மோசமான வானிலையால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மிசோரி மாகாணத்தில் சூறாவளி பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இதனால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சூறாவளி மற்றும் கனமழை பாதிப்பால் இதுவரை 43 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x