Published : 28 Nov 2015 09:34 AM
Last Updated : 28 Nov 2015 09:34 AM

உலக மசாலா: பாம்பூ டவர்!

பாரிஸில் இருக்கும் ‘ஃப்ளவர் டவர்’ பார்க்கும்போது அடுக்கு மாடிக் கட்டிடத்தில் சின்னக் காடு இருப்பது போலத் தோற்றம் தருகிறது. 10 மாடிகள் கொண்ட அந்தக் குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் 380 மூங்கில் மரங்கள் தொட்டிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. மழை நீர் சேமிக்கப்பட்டு, செடிகளுக்குத் தானாகத் தண்ணீர் செல்லும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வெயில் காலத்தில் தண்ணீர் இல்லாவிட்டாலும்கூட மூங்கில் மரங்கள் பசுமை மாறாமல் காட்சியளிக்கின்றன.

அட, இந்த ‘பாம்பூ டவர்’ அற்புதமான யோசனை!

அலெக்ஸ் அஸ்ஸாலி சிரியாவில் இருந்து அகதியாக ஜெர்மனியில் தஞ்சம் அடைந்தவர். கடந்த ஓராண்டு காலமாக வீதியில் உணவுகளை வைத்து பசியால் வாடும் ஜெர்மன் மக்களுக்கு இலவசமாக உணவளித்து வருகிறார். அலெக்ஸின் சேவையைக் கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறார்கள் ஜெர்மன் மக்கள். சிலர் அவருடன் சேர்ந்து உணவளிக்கும் சேவையில் பங்கேற்கவும் செய்கிறார்கள். ‘’சிரியாவில் இருந்தபோது, அதிபரை எதிர்த்து ஃபேஸ்புக்கில் விமர்சனம் செய்தேன். என் உயிருக்கே அது ஆபத்தாக அமைந்துவிட்டது. என்னுடைய அடையாளத்தை மாற்றிக்கொண்டு, 2007-ம் ஆண்டு ஜெர்மனிக்கு அகதியாக வந்து சேர்ந்தேன். எங்கே செல்வது என்று புரியவில்லை.

தெருவில் அலைந்த எனக்கு, நிறைய ஜெர்மன் மக்கள் உணவு, உடை என்று உதவி செய்தனர். ஒரு மூதாட்டி அவர் வீட்டில் என்னை தங்கிக் கொள்ளச் சொன்னார். ஒரு வேலை தேடிக்கொண்டேன். கம்ப்யூட்டர் படித்தேன். இன்று ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். 8 ஆண்டுகளில் நல்ல நிலைக்கு வந்துவிட்டேன். என்னைக் காப்பாற்றி, இன்று இந்த நிலைக்கு வாழ வைத்த ஜெர்மன் மக்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் தினமும் பசிப்பவர்களுக்கு உணவளித்து வருகிறேன். நான் நன்கொடையாக எதையும் பெற்றுக்கொள்வதில்லை.

என் சம்பாத்தியத்தில் இருந்து இதைச் செய்து வருகிறேன். கம்ப்யூட்டர் பொறியாளராக இருந்தாலும் எனக்குச் சமைப்பது என்றால் விருப்பம் அதிகம். அதனால் நானே சமைத்து, எடுத்து வந்துவிடுவேன். ’ஏதாவது ஜெர்மன் மக்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டும்’ என்று எழுதி வைத்துவிடுவேன். என்னைப் போல வேறு யாராவது இதுபோலச் செய்வதற்கு உதவியாக இருக்கும் இல்லையா?’’ என்கிறார் அலெக்ஸ்.

வெல்டன் அலெக்ஸ்!

சீனாவின் ஸிங்ஜெங் நகரில் வசிக்கும் 54 வயது ஷி ஜுபின் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். தன் உழைப்பால் வெற்றிகரமான தொழிலதிபராக மாறிவிட்டார். 15 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் சிலைகளைச் செய்ய ஆரம்பித்தார். இன்று 9,200 சிலைகளைச் செய்து பார்வைக்கு வைத்திருக்கிறார். இன்னும் 800 சிலைகள் செய்து, 10 ஆயிரம் சிலைகளாக்க வேண்டும் என்பது அவரது லட்சியம். சிரிப்பு புத்தர் சிலைகள் ஒவ்வொன்றும் சிறிய உணர்ச்சிகளில் ஒன்றுக்கு ஒன்று வேறுபடுகின்றன. சில சிலைகள் 2 மீட்டர் உயரம் வரை இருக்கின்றன. புத்தர் சிலைகள் நெருக்கமாக அணிவகுத்து நிற்பதைப் பார்த்தால், ராணுவ புத்தர் அணிவகுப்பு போலத் தோன்றுகிறது. தானாகப் பட்டுப்போன மரங்களில் இருந்தே சிலைகளைச் செய்வதால், சுற்றுச் சூழலுக்கு எந்த விதத்திலும் தான் தீங்கு விளைவிக்கவில்லை என்கிறார் ஷி ஜுபின்.

டெரகோட்டா ஆர்மியிலிருந்து இன்று வரை சீனர்களுக்கு பிரமாண்டத்தில் உள்ள ஆர்வம் குறையவில்லை!

ஃப்ளோரிடாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஸுல்ஸ், லிலா என்ற கறுப்பு லேப்ரடார் நாயை வளர்த்து வருகிறார். மிக புத்திசாலி என்பதால் நீச்சல், கடலுக்குள் சென்று லாப்ஸ்டர் பிடிப்பது எப்படி என்று பயிற்சி அளித்திருக்கிறார். அலெக்ஸும் லிலாவும் படகில் கடலுக்குள் செல்கிறார்கள். லாப்ஸ்டர் இருக்கும் பகுதிகளில் நாயை இறக்குகிறார். கீழே சென்று, லாப்ஸ்டரை வாயால் கவ்விக்கொண்டு, மேலே வருகிறது. அலெக்ஸ் வாங்கிக்கொண்டு, லிலாவைத் தட்டிக் கொடுக்கிறார். மீண்டும் கடலுக்குள் சென்று வேட்டையாடிக் கொண்டு வந்து தருகிறது லிலா.

ஓர் அன்பான தட்டலுக்கு எவ்வளவு வேலை செய்கிறது இந்த லிலா!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x