Last Updated : 29 Nov, 2015 12:45 PM

 

Published : 29 Nov 2015 12:45 PM
Last Updated : 29 Nov 2015 12:45 PM

பாகிஸ்தானில் கடந்த 5 ஆண்டில் தீவிரவாதத்துக்கு 8,500 பேர் பலி: ராணுவத்தின் பதில் தாக்குதலுக்கு 3,759 தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட மொத்தம் 8,500 பேர் தீவிரவாத தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதுபோல ராணுவத்தின் பதில் தாக்குதலுக்கு 3,759 தீவிரவாதிகள் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது, அந்நாட்டு உள்துறை அமைச்சகம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் வருமாறு:

கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 5,532 பொதுமக்கள் பலியாயினர். 10,195 பேர் காயமடைந்தனர். இதுபோல பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3,157 பேர் பலியாயினர், 5,988 வீரர்கள் காயமடைந்தனர்.

தீவிரவாதிகளின் புகலிடமாக கருதப்படும், அந்நாட்டு மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வரும் பழங்குடியினர் பகுதியில் (எப்ஏடிஏ) பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் கொல்லப்பட்டுள்ளனர்.

இங்கு மட்டும் 1,487 வீரர்கள் தீவிரவாதத்துக்கு பலியாகி உள்ளனர். 2,224 பேர் காயமடைந்தனர். இதே பகுதியில் பொதுமக்களில் 1,470 பேர் பலியானதுடன், 2,761 பேர் காயமடைந்தனர்.

இதே காலகட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 3,759. இதில் பழங்குடியினர் பகுதிகளில் மட்டும் 2,530 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 5 ஆண்டுகளில் தீவிரவாத குற்றங்களுக்காக 173 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இப்போது 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக் காவின் உலக வர்த்தக மையத்தை தீவிரவாதிகள் தகர்த்தனர். இதையடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா போரை தொடங்கியதிலிருந்து இதுவரை 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தான் பொருளாதாரம் 10,000 கோடி டாலர் இழப்பை சந்தித்துள்ளது. இவ்வாறு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பாகிஸ்தானின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான பஞ்சாபில், அரசு மற்றும் ராணுவத்துக்கு சொந்தமான முக்கிய இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உளவுத் துறை வழங்கிய தகவலின் அடிப்படையில் பஞ்சாப் மாநில உள்துறை, காவல் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை என்று அந்நாட்டு மத்திய அரசு கூறியிருந்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x