Last Updated : 29 Oct, 2015 10:37 AM

 

Published : 29 Oct 2015 10:37 AM
Last Updated : 29 Oct 2015 10:37 AM

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 11

சே குவாராவைப் பற்றி எதிர்மறையாக விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். முக்கியமாக தனது புரட்சியின்போது கியூபாவின் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு அவர் மரண தண்டனை விதித்தார் என்கிறார்கள்.

தன் கடைசி காலத்தில் (அக்டோபர் 1966) பொலிவியாவுக்கு வந்தபோது அங்கு ஒரு மிகப் பெரிய புரட்சியை உண்டாக்கிவிட முடியும் என்று கருதியிருந்தார் சே குவாரா.

மலைப்பாங்கான பொலிவியாவுக்கு அவர் வந்தபோது அங்கிருந்த மக்களில் 60 சதவிகிதம் பேர் அய்மாரா எனும் உள்ளூர் மொழி மட்டுமே தெரிந்தவர்களாக இருந்தனர். இவர்களில் பலரும் விவசா யத்தில் ஈடுபட்டிருந்தனர். தகர (டின்) சுரங்கங்களிலும் பலர் வேலை செய்து கொண்டிருந்தனர். பெண்கள் நகரங்களி லுள்ள செல்வந்தர்களின் பங்களாக்களில் வீட்டுவேலை செய்தனர்.

இரண்டாம் உலகப்போர் முடிவடை வதற்கு முன் பொலிவிய அரசில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் பெரும் செல்வந்தர்கள்.

இவர்கள் அந்த நாட்டின் டின் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். வளம்கொழித்த வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

ஆனால் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு சர்வதேச சந்தையில் தகரத்தின் விலை வெகுவாக சரிந்தது. தவிர ஒட்டு மொத்தமாகவே பொலிவியா வறுமையில் மூழ்கத் தொடங்கியது. எனவே கையால் ஆகாத அரசுக்கு எதிராகப் புரட்சிகள் வெடித் தன. மாணவர்களும் தொழிலாளர்களும் சிறு வணிகர்களும், இதில் பெருமளவில் பங்கேற்றனர். ஆளும் கட்சியாக அப்போது விளங்கியது தேசிய புரட்சி இயக்கம் என்ற கட்சி. இதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான மேஜர் குவால்பெர்ட்டோ விலர்ரோயல் என்பவர் புரட்சியாளர்களால் கொலை செய்யப்பட்டு தெருவிளக்குக் கம்பம் ஒன்றில் தொங்கவிடப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த கட்சியின் பல தலைவர்கள் தலைமறைவானார்கள். கட்சியே தலைமறைவாகிவிட்டது என்றும் கூறலாம்.

1946க்குப் பிறகு இக்கட்சி விக்டர் எஸ்டென்சோரோ என்பவர் தலைமையில் தன்னை புதுப்பித்துக் கொண்டது. அர்ஜென்டி னாவில் குழுமிய இவர்கள் அங்கிருந்தே பொலிவியாவின் அதிபராக விக்டர் எஸ்டென்சோரோவைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் இந்தத் தேர்தல் செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டு ராணுவத்தைச் சேர்ந்த ஜெனரல் ஹ்யூகோ பலீனியன் என்பவரிடம் அரசு ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் இந்த அரசுக்கு எதிராக ஒன்று திரண்டனர் மாணவர்களும், அறிவு ஜீவிகளும், தொழிற்சங்கத் தலைவர்களும். 1952 ஏப்ரலில் இவர்கள் தங்கள் எதிர்ப்புகளைச் செயலில் காட்டியபோது அது மிக வலிமையானதாக இருந்தது. காரணம் இவர்களில் பலர் அதற்குள் ஜெர்மானிய ராணுவத்திடம் பயிற்சி பெற்றிருந்ததுதான். தவிர பீரங்கிகளைக்கூட இவர்கள் பயன்படுத்தினார்கள். பின்னர் நாட்டின் தலைமைப் பதவி விக்டர் எஸ்டென்சோரோவுக்கு வழங்கப்பட்டது.

எஸ்டென்சோரோ ஆட்சியில் பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டன. வாக்குரிமை வழங்கப்பட்டது. நிலச் சீர்திருத்தம் அறிமுகமானது. கிராமக் கல்வி ஊக்குவிக்கப்பட்டது. பெரும் டின் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டன.

அமெரிக்காவைப் பொறுத்தவரை சே குவாரா போன்ற ‘தீவிரவாதிகளை’ விட, எஸ்டென்சோரோ போன்ற சீர்திருத்த வாதிகள் பரவாயில்லை என்று கருதியது. தவிர எதற்கும் சோவியத் யூனியனை அணுகாதவராகவும் எஸ்டென்சோரோ விளங்கினார். எனவே அவருடன் நட்பு பாராட்டியது அமெரிக்கா. இதன் தொடர்ச்சி யாக பொலிவியாவில் சில பெட்ரோலியக் கிணறுகள் அமெரிக்கர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டன.

அடுத்த அதிபர் தேர்தலில், அதற்கு முன்பு துணை அதிபராக இருந்த ஜுவாஜோ என்பவர் அதிபர் ஆனார். இவர் காலத்தில் நாட்டில் பெரும் மாறுதல்கள் தேவை என்பவர்களுக்கும், அவற்றை விரும்பாத வர்களுக்குமிடையே பிளவு ஏற்பட்டது. சுரங்கங்களிலிருந்து குறைவாகவே டின் கிடைத்தது. எனவே இயந்திரங்களை சுரங்க வேலைக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

சுரங்கத் தொழிலாளிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். வன்முறையிலும் ஈடுபட்டனர். அரசு அவ்வப்போது தலையிட்டு தொழிலாளிகளின் சம்பளத்தை அதிக அளவு உயர்த்தியது. இதன் காரணமாக உலக அளவில் குறைந்த விலைக்குப் போட்டியிட்டு டின்னை விற்க முடியாமல் முதலாளிகள் தவித்தனர்.

வேறொரு முக்கியமான மாற்றத்தையும் குறிப்பிடத்தான் வேண்டும். பொலிவியாவில் இருந்த மண்ணின் மைந்தர்கள் அதிகாரபூர்வ மாக குடிமக்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலை உருவானது விக்டர் எஸ்டென்சோரோ மற்றும் ஜுவாஜோ ஆகியோரின் ஆட்சிக் காலத்தில்தான். இதன் விளைவாக நாட்டில் எங்கு வேண்டுமானாலும் அவர்கள் செல்லலாம் என்ற நிலை உருவானது. இதன் காரணமாகப் பலரும் நகரங்களை நோக்கி செல்லத் தொடங்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு அங்கே கிடைக்கவில்லை. அதே சமயம் விவசாயம் பாதித்தது. பிற நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் பொலிவியாவுக்கு ஏற்பட்டது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x