Published : 07 Dec 2020 12:54 PM
Last Updated : 07 Dec 2020 12:54 PM

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் 60,000 கோலா கரடிகள் பலி

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஏற்பட்ட காட்டுத் தீயில் 60,000 கோலா கரடிகள் பலியாகி உள்ளதாக உலகளாவிய நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலகளாவிய நிதி அமைப்பு கூறும்போது, “ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் காடுகள் அடர்ந்த 10 மில்லியன் ஹெக்டேர் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ பரவியது.

இதில் 2,000 வீடுகள் எரிந்தன. 28 பேர் இறந்தனர். இந்த காட்டுத் தீயில் அரிய வகை விலங்குகள் உட்பட லட்சக்கணக்கான வனவிலங்குகள் பலியாகின. தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் காட்டுத் தீ பற்றி எரிந்தது. இதில் 3 பில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் பலியாகின.

கோலா கரடிகள் , கங்காருகள் அதிக அளவில் பலியாகி உள்ளன. இதில் கோலா கரடிகள் மட்டும் 60,000 எண்ணிக்கையில் இறந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான கோலா கரடிகள் உள்ளன. இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இந்த எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது என்று அந்நாட்டு விலங்குகள் நல ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவியது. இதன் காரணமாக சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவியது.

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த பிரதமர் ஸ்காட் மோரிசன் தவறிவிட்டார் என சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x