Published : 09 Oct 2015 09:52 AM
Last Updated : 09 Oct 2015 09:52 AM

உலக மசாலா: விண்வெளி விடுதி!

ஸ்விட்சர்லாந்தின் ஜுரிச் நகரில் கமெஹா க்ராண்ட் என்ற தங்கும் விடுதி கட்டப்பட்டிருக்கிறது. ’விண்வெளி’ என்ற பொருளில் இந்த விடுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனைச் சேர்ந்த மைக்கேல் நஜ்ஜார் என்பவர் இந்த விடுதியை வடிவமைத்திருக்கிறார். ஜீரோ புவியீர்ப்பு விசையில் மெத்தை அந்தரத்தில் மிதப்பது போலவும் ராக்கெட் என்ஜின்களில் இருக்கும் விளக்குகள் போலவும் மேற்கூரையிலும் சுற்றுச் சுவர்களிலும் விண்மீன் கூட்டங்கள் இருப்பது போலவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஊழியர்கள் அனைவரும் ரோபோக்கள். கறுப்பு, வெள்ளை, சாம்பல் வண்ணங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

விண்வெளிக்குச் செல்லாமலே விண்வெளியில் வசிக்கலாம்!

ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு குழுவினர் கடலுக்கு அடியில் தேவாலயம் அமைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். கேப் ஃபியோலண்ட் என்ற இடத்தில் 20 மீட்டர் ஆழத்தில் மிகப் பெரிய சிலுவையை நிறுவியிருக்கிறார்கள். 1850 முதல் 1940 வரை இந்த இடத்தில் ராணுவ கப்பல்களும் ராணுவ நடவடிக்கைகளும் அதிகமாக இருந்தன. செயிண்ட் நிகோலஸ் தேவாலயம் என்று பெயரும் வைத்துவிட்டனர்.

ரஷ்ய மோட்டார் சைக்கிள் க்ளப்பும் மாஸ்கோவைச் சேர்ந்த ஒரு தேவாலயமும் இந்தத் திட்டத்துக்குச் செலவு செய்து வருகின்றன. நிலத்தில் இருக்கும் தேவாலயத்தைப் போலவே உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து பார்க்கும் விதத்தில் அமைக்க இருக்கிறார்கள். தேவாலயப் பணிகள் முடிவுற்றதும் க்ரிமியன் வரலாற்றை எடுத்துச் சொல்லும் விதத்தில் ஓர் அருங்காட்சியகமும் இங்கே அமைக்கப்பட இருக்கிறது.

இனி கடல்களிலும் கட்டிடங்கள் முளைக்கப் போகின்றன…

இங்கிலாந்தில் வசித்துவரும் கிட்டன் ரிச்சர்ட் வீட்டுக்குச் சென்றால் கால இயந்திரத்தில் 1940ம் ஆண்டுக்குச் சென்றது போலத் தோன்றும். கிட்டன், ரிச்சர்ட் இருவரும் அந்தக் கால ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். தலை அலங்காரம், செருப்பு, ஒப்பனை, வாட்ச், அணிகலன்கள் என்று அனைத்தும் அந்தக் காலத்தில் இருந்தது போலவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. வீட்டில் உள்ள நாற்காலிகள், அலமாரிகள், பாத்திரங்கள், ஓவியங்கள், அலங்காரப் பொருட்கள், விளையாட்டுச் சாமான்கள், திரைச்சீலைகள், ஸ்விட்ச் போர்டுகள், டிவி, தொலைபேசி என்று அனைத்தையும் மாற்றியிருக்கிறார்கள்.

“மிஷேல் என்ற என் பெயரைக்கூட கிட்டன் என்று மாற்றிக்கொண்டேன். எனக்கு அந்தக் கால வாழ்க்கையின் மீது தீராத காதல். 15 ஆண்டுகளாக நான் இப்படித்தான் வாழ்ந்து வருகிறேன். நாங்கள் சாப்பிடும் உணவு, கேட்கும் இசை, பார்க்கும் படங்கள் அனைத்தும் அந்தக் காலத்தைச் சேர்ந்தவைதான். அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு மாநாட்டுக்குச் சென்றபொழுதுதான் ரிச்சர்ட்டைச் சந்தித்தேன். எங்கள் இருவர் விருப்பங்களும் ஒத்துப் போயின.

எனக்காக முழுமையாகத் தன்னை மாற்றிக்கொண்டார். அந்தக் கால ராணுவ வீரர் உடைகளும் முறுக்கிய மீசையுமாக வலம் வருகிறார். பழைய ரயில் பெட்டியில்தான் எங்கள் திருமணம் நடைபெற்றது. 2 மாதப் பெண் குழந்தைக்கும் அந்தக் கால ஆடைகளேயே அணிவித்து வருகிறோம். என் மகள் வளர்ந்தாலும் நவீன உலகத்துக்கு ஏற்ப மாறமாட்டாள் என்று நம்புகிறேன்’’ என்கிறார் 35 வயது கிட்டன்.

அட! வித்தியாசமான வாழ்க்கைதான்!

அலபாமாவில் வசிக்கிறார் 24 வயது ஆஷ்லே நிகோல். அவரது படுக்கை அறை முழுவதும் 200 பொம்மைகளை வைத்திருக்கிறார். அவற்றில் சில பிசாசு பொம்மைகள். மனைவியின் விருப்பத்துக்காக இந்தப் பொம்மைகளைச் சகித்துக்கொண்டார் பிலிப் பாஸ்டன். ஒருநாள் இரவு அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது இரண்டு பொம்மைகள் அவரைத் தாக்கக் தொடங்கிவிட்டனவாம். பயந்து அலறியவர், படுக்கை அறைகளில் இருந்த பொம்மைகளை அப்புறப்படுத்திவிட்டார். ஆனாலும் நிகோலுக்கு பொம்மைகள் மீதுள்ள அன்பு சிறிதும் குறையவில்லை.

“12 ஆண்டுகளாக பொம்மைகளைச் சேகரித்து வருகிறேன். ஆண்களால் ஏமாற்றப்பட்ட 2 பெண்கள் இறந்து போய்விட்டனர். அவர்களின் பொம்மைகள் என்னிடம் இருக்கின்றன. எந்த ஜோடியும் மகிழ்ச்சியாக இருப்பது அந்தப் பொம்மைகளுக்குப் பிடிப்பதில்லை. ஏதாவது ஒருவிதத்தில் பயமுறுத்தி விடுகின்றன. படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த நான், திடீரென்று விழித்தபோது வேறொரு அறையில் இருந்தேன். பொம்மைகள் இருக்கும் இடத்தில் நான் சிரிப்பதோ, பேசுவதோ கூட கிடையாது. ஏதோ அமானுஷ சக்திகள் பொம்மைகள் மூலம் உலாவுகின்றன’’ என்கிறார் நிகோல்.

பொம்மைகளை விட்டுவிட்டு, மனநல மருத்துவரைப் பாருங்க நிகோல்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x