Published : 28 May 2014 12:57 PM
Last Updated : 28 May 2014 12:57 PM

மோடி - நவாஸ் சந்திப்பு: முன்னெச்சரிக்கையுடன் வரவேற்ற அமெரிக்கா

நரேந்திர மோடி - நவாஸ் ஷெரீப் இடையிலான சந்திப்பை வெகுவாக பாரட்டியுள்ள அமெரிக்கா, இந்த நிகழ்வை முன்னெச்சரிக்கையுடனான நம்பிக்கையுடன் பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

டெல்லி பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் நவேஸ் ஷெரீப் நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின்போது, எல்லைத் தாண்டிய பயங்கரவாதம், காஷ்மீர் விவகாரம், பயங்கரவாத பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்கதாக கவனிக்கப்படும் இந்தச் சந்திப்பு குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியது:

"நவாஸ் - மோடி சந்திப்பு சாதகமான நிலையில் பார்க்கப்பட்டாலும், அமெரிக்கா இந்தச் சந்திப்பை முன்னெச்சரிக்கையுடனான நம்பிக்கையுடன்தான் பார்க்கிறது. ஆனால், இரு நாடுகளும் முன்னோக்கிச் செல்ல வேண்டிய பாதைதான் இது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேர்மையான உறவு ஏற்பட இந்தச் சந்திப்பு ஆரம்பமாக அமையும். இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவ, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியின்போது பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதில் ஒன்று, லாகூர் - டெல்லி இடையிலான பஸ் போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தப் போக்குவரத்து மிகுந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிந்தது.



அதே நிலையில், தற்போது நரேந்திர மோடியின் செயல்பாடுகளும் ஒப்பிட்டு பார்க்கக் கூடியவையாக இருக்கிறது. பாகிஸ்தான் பிரதமரும் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு சென்று, மோடி தலைமை பொறுப்பை ஏற்கும் நிகழ்வில் பங்கேற்றது வரவேற்கத்தக்கது.

இந்த இரு ஆசிய நாடுகளின் உறவை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை மற்றும் நடவடிக்கைகளை நாங்கள் என்றுமே ஊக்குவிப்போம். இது தொடர்பாக தற்போது நடைபெற்றுள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும் எங்களது பாராட்டுக்கள்" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x