Last Updated : 01 Oct, 2015 10:51 AM

 

Published : 01 Oct 2015 10:51 AM
Last Updated : 01 Oct 2015 10:51 AM

ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

காஷ்மீர் பகுதியில் இருந்து இந்திய ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுசபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.நா.வுக்கான இந்திய தூதரக அதிகாரி அபிஷேக் சிங் ஐ.நா. பொதுசபை விவாதத்தில் கூறியதாவது:

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான் என்று கூறுவதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தீவிரவாதத்துக்கு உரமிட்டு தண்ணீர் ஊற்றி வளர்ப்பதே அந்த நாடுதான். அண்டை நாட்டின் மீது மறைமுகமாக போர் தொடுக்க தீவிரவாதத்தை அந்த நாடு பயன்படுத்துகிறது.

அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இப்போதும் இந்தியா தயாராக உள்ளது. ஆனால் அந்த நாடு முதலில் தீவிரவாதத்தையும் வன்முறையையும் கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தீவிரவாதத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுவது தவறு. தீவிரவாதிகளுக்கு ஆதரவும் அடைக்கலமும் அளிப்பது அந்த நாடு மட்டுமே. அதனால்தான் எப்போதுமே பாகிஸ்தான் அரசியலில் குழப்பம் நிலவுகிறது.

உண்மையை சொல்வதென்றால் காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பெருகும் ஆதரவு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பேச்சுக்கு உள்நாட்டில் மட்டுமே ஆதரவு காணப்படுகிறது. இதர உலக நாடுகள் பாகிஸ்தானை தீவிரவாத கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கின்றன.

இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ள அமெரிக்காவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி தனது ட்விட்டர் பதிவில், புதுடெல்லிக்கு எதிரான பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதரவில்லை, நவாஸின் பேச்சுக்கு உள்நாட்டில் மட்டுமே ஆதரவு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தின் மூலம் காஷ்மீரை கைப்பற்றிவிடலாம் என்று பாகிஸ்தான் கனவு கண்டது. அந்த கனவு நிறைவேறாததால் இப்போது ஐ.நா. சபையில் நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்று பெரும்பாலான சமூக வலைத்தள ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x