Published : 15 Sep 2015 05:26 PM
Last Updated : 15 Sep 2015 05:26 PM

வீடியோ பகிர்வு: ஃபேஸ்புக் அலுவலகத்தைச் சுற்றிக் காட்டும் மார்க்!

'எனது அலுவலகமும், வேலையும் மிகவும் வெளிப்படையானது. இங்கே ஊழியர்கள் வேலை பார்க்கும்போது தங்களை சுதந்திரமாக உணரலாம்; அதன் மூலம் அவர்களின் வேலையும் சிறப்பாக அமையும்' என்கிறார் மார்க்.| வீடியோ இணைப்பு கீழே |

நம் அலுவலகத்தில் தினசரி வேலைகளுக்கு நடுவே ஃபேஸ்புக் பார்க்கிறோம். ஆனால் அதையே வேலையாக வைத்திருக்கும் ஃபேஸ்புக் அலுவலகத்தைப் பார்த்திருக்கிறோமா?

முதன்முறையாக ஃபேஸ்புக் நிறுவனமே, தனது தலைமை அலுவலத்தை நேரடியாக வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறது. 3:51 நிமிடங்கள் கொண்ட அந்த காணொளியில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தோன்றி, தனது அலுவலகத்தைச் சுற்றிக் காண்பித்திருக்கிறார்.

அதில், ஃபேஸ்புக் ஊழியர்களின் மேசை, தனது அலுவல் இடம், சந்திப்பு அறை ஆகியவற்றை ஆர்வத்துடன் விளக்குகிறார் மார்க். இரண்டு மாதங்களுக்கு முன்னால்தான் புதிய அலுவலகத்துக்கு வந்ததாகக் கூறும் மார்க், 'ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், அவர்களை, தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள வைப்பதுமே, தனது வேலை' என்கிறார். இதனாலேயே தனது தலைமை அலுவலகத்தின் ஊழியர் அறைகளை தனித்தனியாக அமைக்காமல், ஒரே கூரையின் கீழ் இடையில் எவ்வித சுவர்களும் இல்லாமல் அமைத்திருக்கிறார்.

மார்க் வேலை பார்க்கும் இடமும், சிறப்பாக எந்த வசதிகளும் செய்யப்படாமல் மிகவும் சாதாரணமாக இருக்கிறது. மேசையின் இரு பக்கங்களிலும் புத்தகங்கள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் தொலைதொடர்பு குறித்த புத்தகமும் அடக்கம். அதற்கு அருகிலேயே ஃபேஸ்புக்கின் சின்னம், ஒரு மரப்பட்டையில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு செயற்கைக்கோள், நிறுவனத்தின் உள்கட்டமைப்பைக் கண்காணிப்பதற்காகப் பொருத்தப்பட்டிருக்கிறது.

தனது பெரும்பாலான நேரத்தை இங்கேதான் செலவிடுகிறேன் என்று கான்ஃபரன்ஸ் அறையைக் காண்பிக்கிறார் மார்க். ஃபேஸ்புக் அலுவலக ஊழியர்களுக்கு எனத்தனியாக எந்தவொரு அறையையும் ஒதுக்காத மார்க், வெளியில் இருந்து சந்திக்க வருபவர்களையும், அலுவல் விஷயமாகத் தன்னைக் காண வருபவர்களையும் சந்தித்துப் பேசவே இந்த இடம் என்கிறார். 'எனது அலுவலகமும், வேலையும் மிகவும் வெளிப்படையானது' என்று கூறுபவர், 'இங்கே ஊழியர்கள் வேலை பார்க்கும்போது தங்களை சுதந்திரமாக உணரலாம்; அதன் மூலம் அவர்களின் வேலையும் சிறப்பாக அமையும்' என்கிறார்.

ஃபேஸ்புக் தலைமை அலுவலகத்தில், மார்க் பேசும் காணொளிக்காட்சியின் இணைப்பு



>

First live video at Facebook HQ

Posted by >Mark Zuckerberg on Monday, 14 September 2015


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x