Published : 15 Sep 2015 10:33 AM
Last Updated : 15 Sep 2015 10:33 AM

மெக்கா பெரிய மசூதி விபத்தில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

மெக்கா பெரிய மசூதியில் கிரேன் முறிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண் ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 11-ம் தேதி மெக்கா பெரிய மசூதியில் ராட்சத கிரேன் முறிந்து மசூதியின் உட்புற வளாகத்தில் விழுந்தது. அப்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்தியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் கேரளா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டெல்லியில் கூறியதாவது: மெக்கா பெரிய மசூதி விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 9 இந்தியர்கள் உயிரிழந் துள்ளனர், அவர்களையும் சேர்த்து இதுவரை 11 இந்தியர்கள் பலியாகி உள்ளனர்.

மேலும் 19 இந்தியர்கள் படுகாய மடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர். காயமடைந்தவர்களில் மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தலா 3 பேர், டெல்லி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் தலா இருவர், பஞ்சாப், பிஹார், அசாமை சேர்ந்தவர்கள் தலா ஒருவர் ஆவர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உயிரிழந்த மேலும் 9 இந்தியர்களின் பெயர்கள் தெரிய வந்துள்ளன. எனினும் அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்த வர்கள் என்பது உறுதி செய்யப்பட வில்லை.

மெக்கா மசூதி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இந்தியர்களையும் சேர்த்து 115 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சவுதி அரேபிய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கிரேன் முறிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வரும் சவுதி பின்லேடன் குருப் நிறுவன ஊழியர்கள், நேரில் பார்த்த சாட்சி களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முறிந்து விழுந்த கிரேன் ஜெர்மனி நிறுவன தயாரிப்பு ஆகும். எனவே அந்த நிறுவனத்திடமும் சவுதி அரேபிய அரசு விவரங்களைக் கோரியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x