Published : 26 Sep 2015 09:05 AM
Last Updated : 26 Sep 2015 09:05 AM

உலக மசாலா: மரத்தை வெட்டி சிற்பம்!

சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் ஒரு நிறுவனம் மரங்களை வெட்டி, சிற்பங்களைச் செதுக்கி வைத்திருக்கிறது. உயிருடன் இருக்கும் கற்பூர மரங்களின் கிளைகளை வெட்டிவிட்டு, நடு மரத்தில் டிராகன் உட்பட பல சிற்பங்களைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். இந்தச் சிற்பங்களின் மீது தங்க வண்ணம் பூசி விடுகிறார்கள். பார்ப்பதற்கு உலோகச் சிற்பங்கள் போல இவை காட்சியளிக்கின்றன. இப்படிச் சிற்பங்களுக்காகச் செதுக்கப்படும் மரங்கள் விரைவில் மடிந்து போய் விடுகின்றன.

‘‘ஒவ்வொரு மரச் சிற்பம் உருவாக்கு வதற்கும் 100 நாட்கள் தேவைப்படுகின்றன’’ என்கிறார் சிற்பங்களை உருவாக்கி வரும் நிறுவனத்தின் உரிமையாளர். ஆனால் இந்த மரங்களைப் பார்த்து பெரும்பாலான மக்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனர். உயிருடன் இருக்கும் மரத்தை, சிற்பம் என்ற பெயரில் கொடூரமாகக் கொலை செய்வதை அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். எதிர்ப்பு வலுத்து வருவதால், அந்த நிறுவனம் இந்தத் திட்டத்தைக் கைவிடும் எண்ணத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

சே… அழகுணர்ச்சிக்கு ஓர் அளவில்லையா?

ஜப்பானைச் சேர்ந்தவர் 105 வயது ஹிடெகிசி மியாஸாகி. கியோடோவில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு, 44.22 நொடிகளில் கடந்து சாதனை படைத்திருக்கிறார். அவர் வயதுக்குரியவர்களில் உலகின் அதிவேக ஓட்ட மனிதர் என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார். உலகின் அதிவேக ஓட்டப்பந்தயக்காரரான உசேன் போல்ட் 100 மீட்டரை 32.64 நொடிகளில் கடந்திருக்கிறார். ஆனால், மியாஸாகியின் வயதை வைத்துப் பார்க்கும்போது இந்தச் சாதனை மகத்தானது என்கிறார்கள்.

உலகின் அதிவேக தாத்தா!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x