Published : 09 May 2014 10:00 AM
Last Updated : 09 May 2014 10:00 AM

உலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் பட்டியலில் 54 இந்திய கம்பெனிகள்

உலகின் மிகவும் பெரிய, சக்திவாய்ந்த 2000 பொதுத்துறை, தனியார் நிறுவனங்களை போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத ஸ்டேட் வங்கி உள்பட 54 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

வருமானம், லாபம், சொத்துகள், சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியலில் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களே முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ளன. முதல் 10 இடங்களில் 5 சீன நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தமுள்ள 2000 நிறுவனங்களில் அதிகபட்சமாக அமெரிக்காவைச் சேர்ந்த 564 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 54 இந்திய நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 135-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய நிறுவனங்களில் அதிகபட்ச மதிப்புடையது இதுதான். அதன் சந்தை மதிப்பு 50.9 பில்லியன் டாலர் ஆகும்.

இதற்கு அடுத்தபடியாக பாரத ஸ்டேட் வங்கி 155-வது இடத்தில் உள்ளது. இதன் சந்தை மதிப்பு 23.6 பில்லியன் டாலர். இதற்கு அடுத்தபடியாக ஒஎன்ஜிசி (176), ஐசிஐசிஐ வங்கி (304), டாடா மோட்டார்ஸ் (332), இண்டியன் ஆயில் (416), எச்டிஎப்சி வங்கி (422), கோல் இந்தியா (428), எல் அண்ட் டி (500), டிசிஎஸ் (543), பார்தி ஏர்டெல் (625), ஆக்சிஸ் வங்கி (630), இன்போசிஸ் (727) பாங்க் ஆப் பரோடா (801), மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (803), ஐடிசி (830), விப்ரோ (849), பெல் (873), கெயில் இண்டியா (995), டாடா ஸ்டீல் (983), பவர் கிரிட் ஆப் இண்டியா (1011), பாரத் பெட்ரோலியம் (1045), எச்சிஎல் (1153), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (1211), அதானி எண்டர்பிரைசஸ் (1233), கோட்டக் மஹிந்திரா வங்கி (1255), சன் பார்மா (1294), ஸ்டீஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா (1329), பஜாஜ் ஆட்டோ (1499), ஹீரோ மோட்டார்ஸ் (1912), ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் (1955), கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ் (1981), ஜெஎஸ்டபிள்யூ ஸ்டீல் (1990) ஆகிய இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

மொத்தம் 63 நாடுகளின் நிறுவனங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. சீனாவின் அரசு வங்கியான ஐசிபிசி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. சீனாவின் கன்ஸ்ட்ரக்சன் வங்கி 2-வது இடத்திலும், சீன வேளாண்மை வங்கி 3-வது இடத்திலும் உள்ளன.

அமெரிக்காவின் ஜே.பி.மோர்கன் வங்கி, நிதி நிறுவனம் 4-வது இடத்தில் உள்ளது. அமெரிக்க கோடீஸ்வரர் வாரன் பபெட்டின் பெர்க்சயர் ஹாத்வே 5-வது இடத்திலும், அமெரிக்காவின் வீல்ஸ் பார்கோ வங்கி 9-வது இடத்திலும் உள்ளன.

ஆப்பிள் 15-வது இடத்தில் உள்ளது. முன்னணி நிதி நிறுவனமான சிட்டி குழுமம் 16-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஐப்பானை சேர்ந்த 20 நிறுவனங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களே இப்பட்டியலில் (467) அதிக இடம் பிடித்துள்ளன. இவற்றின் சொத்து, வருவாய் வேகமாக அதிகரித்து வருவதே இதற்குக் காரணம்.

இதற்கு அடுத்தபடியாக பெட்ரோலியம் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் (125), காப்பீட்டு நிறுவனங்கள் (114), உள்கட்ட மைப்பு நிறுவனங்கள் (110) அதிக லாபத்துடன் செயல்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x