Last Updated : 18 Aug, 2020 08:57 AM

 

Published : 18 Aug 2020 08:57 AM
Last Updated : 18 Aug 2020 08:57 AM

இலங்கை முழுவதும் இருளில் மூழ்கியது: முக்கிய மின்வழித்தடத்தில் கோளாறு; மக்கள் பெரும் அவதி

இலங்கையின் முக்கிய மின்வழித்தடத்திலும், உற்பத்தி நிலையத்திலும் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து நாடுமுழுவதும் பல மணிநேரம் இருளில் மூழ்கியது.

நாடுமுழுவதும் போக்குவரத்து சிக்னல் இயக்கவில்லை, வீடுகளில், கடைகளில் , வர்த்தக மையங்களில், உணவகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், பெருநிறுவனங்கள் என அனைத்துக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். அத்தியாவசிய சேவை வழங்குவதிலும் பெரும் இடர்பாடு ஏற்பட்டது.

இலங்கையின் தெற்கு மாகாணத்தில் உள்ள குருனகேலா பகுதி, கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகள் புறநகர் பகுதிகள் என அனைத்திலும் 6 மணிநேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் மக்கள் பெரும் சிரமப்பட்டனர்.

கடந்த 2016-ம் ஆண்டு இதேபோன்ற மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் அதன்பின் 4 ஆண்டுகளுக்குப்பின் இப்போது ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

இலங்கையின் முக்கிய மின்உற்பத்தி நிலையமான கேரவாலபிதாயா துணை மின்நிலையத்தில் திடீரென பெரிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் திடீர் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தி சிலோன் மின்வாரியம் விளக்கம் அளித்தது.

இந்த மின்வெட்டால், நாடுமுழுவதும் சாலையில் போக்குவரத்து சிக்னல் செயல்படவில்லை. இதனால் போக்குவரத்தைச் சமாளிப்பதில் போலீஸாருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது, அதிலும் மாலை நேரத்தில் மின்சாரம் இல்லாததால், திணறப்போனார்கள். இதனால், பல்வேறு நகரங்களில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக தலைநகர் கொழும்பு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் உரிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

இலங்கையின் மின்வாரியத்துறை அமைச்சர் துலாஸ் அலகப்பெருமா கூறுகையில் “ சிலோன் மின்வாரிய தலைமை அலவலகத்துக்குச் சென்று மின் துண்டிப்பு தொடர்பாக விசாரணை நடத்தினேன்.
இந்த மின்துண்டிப்பு பிரச்சினையை விரைவாக சரிசெய்யும் பொருட்டு அனைத்து பொறியாளர்களும், முக்கிய உயர் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

விரைவில் மின் இணைப்பு நாடுமுழுவதும் வந்துவிடும் என நம்புகிறேன். கடந்த 2016-ம் ஆண்டு இதேபோன்ற மின்துண்டிப்பு ஏற்பட்டது. ஆனால், சதிவேலை ஏதும் இதற்கு காரணமாக இருக்காது என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து சிலோன் மின்வாரியத்தின் தலைவர் விஜிதா ஹீரத் கூறுகையில் “ நாடுமுழுவதும் மின் இணைப்பை மீண்டும் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதலில் அனைத்து நீர்மின் நிலையங்களும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும், அதன்பின் மின்உற்பத்தி நிலையங்கள் இணைக்கப்பட்டு படிப்படியாக மின்சாரம் நாடுமுழுவதும் வழங்கப்படும்.

இந்த திடீர் கோளாறு எவ்வாறு ஏற்பட்டது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திடீரென அசவுகரியக் குறைவு ஏற்பட்டபதற்கு மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x