Last Updated : 02 Sep, 2015 10:25 AM

 

Published : 02 Sep 2015 10:25 AM
Last Updated : 02 Sep 2015 10:25 AM

தவிக்கும் தாய்லாந்து - 2

எரவான் ஆலயத்தில் குண்டு வெடித்ததில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். 90-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

கண்காணிப்பு கேமராவில் இந்தத் தாக்குதல் பதிவாகியிருக்கிறது.

ஆலயத்தில் தாக்குதலை நடத்துகிறான் ஒரு சதிகாரன். பின்னர் அவன் வெளியேறி மோட்டார் சைக்கிள் ஒன்றில் செல்கிறான்.

ஆக அந்த சதிகாரன் விரைவில் கண்டுபிடிக்கப் பட்டுவிடுவான் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இல்லை.

‘’குண்டு வைத்தவனைக் கண்டுபிடிக்க போதிய நவீன சாதனங்கள் எங்களிடம் இல்லை’’ என்று தாய்லாந்து தேசிய தலைமை காவல் அதிகாரி கூறியது அதிர்ச்சியை உண்டாக்கியது. வெளிநாடுகளிலிருந்து உரிய சாதனங்கள் வந்து விடுமென்றும் விரைவில் சதிகாரன் பிடிக்கப்பட்டு விடுவான் என்றும் கூறப்படுகிறது.

சேதமடைந்த எரவான் ஆலயம் பக்தர்களின் வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது. ஓரளவு பாதிக்கப்பட்ட சிலை சரி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் தாய்லாந்தில் சரி செய்யவே முடியாத விஷயங்களும் நடந்துதான் வருகின்றன.

ஏழாம் நூற்றாண்டிலிருந்தே இந்து மதமும், புத்த மதமும் பெருமளவில் தாய்லாந்தில் செழித்து வளர்ந்தன. பத்தாம் நூற்றாண்டில் தொடங்கி தெற்கு தாய்லாந்தை மோன் லாவோ என்ற சாம்ராஜ்யம் ஆட்சி செய்தது. ஆனால் காலப்போக்கில் கெமர் சாம்ராஜ்யம் இங்கு தடம் பதித்தது. தற்கால கம்போடியாவில் அப்போது ஆட்சி செய்த இனம் கெமர். (தாய்லாந்தும், கம்போடியாவும் அண்டை நாடுகள். முன்னொரு காலத்தில் சண்டை நாடுகள்.)

பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுகோதாய் சாம்ராஜ்யம் இன்றைய தாய்லாந்தின் பெரும் பகுதியைத் தன் பிடிக்குள் கொண்டு வந்திருந்தது. சுகோதாய் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு மகிழ்ச்சியின் உதயம் என்று பொருள். புத்தமதத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த சாம்ராஜ்யம் 1238ல் உருவானது. கிழக்கு மாகாணங்கள் மட்டும் கெமர் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆனால் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு மற்றொரு பெரும் சாம்ராஜ்யமான ஆயுத்தயா தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் பரிண மித்தது. சுமார் 400 வருடங்கள் ஆயுத்தயாவின் பிடியில் இருந்தது தாய்லாந்து.

அப்போதைய ராணுவத்தில் வெறும் சிப்பாயாக இருந்த ஒருவர் நாளடைவில் நாட்டின் மன்னர் ஆனார். அவர் பெயர் டக்ஸின். இவரது முன்னோர்கள் சீனர்கள். மன்னர் டக்ஸின் உருவாக்கிய புதிய தலைநகர் தோன்புரி. பின்னர் தாய்லாந்தை சக்ரி பேரரசு ஆட்சி செய்தது. அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் மன்னர் முதலாம் ராமா. (இப்போதைய மன்னர் ஒன்பதாம் ராமா). அவரது ஆட்சிக் காலத்தில் பாங்காக் தலைநகர் ஆனது.

1932க்கு முன்னாள் தாய்லாந்தில் நடைபெற்றது முழுமையாக மன்னர் ஆட்சிதான்.

1932 ஜூன் மாதத்தில் ஒரு பெரும் புரட்சி அங்கு ஏற்பட்டது. அது சயாமியப் புரட்சி என்று அழைக்கப்பட்டது.

மக்கள் கட்சி என்று பொதுவாக அழைக்கப்பட்ட ஓர் அமைப்பில் அரசு அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் பெரும்பாலும் மிக உயர்ந்த பதவிகளில் இல்லாமல் அதற்கு அடுத்த நிலைப் பிரிவைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். இவர்கள் மிகவும் வலிமையான போராட்டத்தைத் தொடங்கினர். மன்னர் உடனடியாகவே சரணடைந்து விட்டதால் வன்முறை இல்லாமலேயே ஆட்சி மாறியது.

முடியாட்சியாக இருந்த தாய்லாந்து அதற்குப் பிறகு அரசியலமைப்பு சார்ந்த முடியாட்சியாக மாறியது. என்றாலும் 1973-ல் தான் தாய்லாந்து மக்கள் முதன்முறையாக ஒரு பிரதமரை தேர்வு செய்தார்கள். இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது மாணவர்கள் புரட்சி.

மாணவர்கள் புரட்சியைத் தொடர்ந்து பிரதமரை மக்கள் தேர்வு செய்யத் தொடங்கினர். எனினும் மன்னர் பதவி தொடர்ந்தது. காலத்தின் கட்டாயமாகவோ என்னவோ சென்ற ஆண்டு தாய்லாந்து ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x