Last Updated : 16 Jun, 2020 01:26 PM

 

Published : 16 Jun 2020 01:26 PM
Last Updated : 16 Jun 2020 01:26 PM

சீனாவில் மீண்டும் கரோனா: பெய்ஜிங்கில் நிலைமை மோசம்; 90 ஆயிரம் பேருக்கு பரிசோதனை; லாக்டவுன் அமல்

சீனாவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை தொடங்கிய உணர்வை பெய்ஜிங் சூழல் ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கில் இதுவரை 106 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதால், பரிசோதனையை சீன அரசு தீவிரப்படுத்தி, 90 ஆயிரம் பேருக்குச் சோதனை நடத்தியுள்ளது.

பெய்ஜிங்கில் நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறும் சீன அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் மீண்டும் லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ஜின்ஃபாடி மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்று வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்தச் சந்தை மூடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதியிருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அந்தச் சந்தைக்குச் சென்றுவந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பெய்ஜிங்கில் நிலைமை மோசமடைந்துவிடும், வூஹானைப் போன்று மற்றொரு நோய்திரளாக பெய்ஜிங் மாறிவிடக்கூடாது என்பதற்காக மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பரிசோதனையை சீன அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதுவரை 90 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்துள்ளதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 22 மணிநேரத்தில் 27 பேர் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் அறிகுறி இல்லாமல் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களை மருத்துவக் குழுவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வூஹானில் கொண்டுவந்ததுபோல் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளையும்,லாக்டவுனை பெய்ஜிங்கின் பல்வேறு பகுதிகளில் சீன அதிகாரிகள் கொண்டுவந்துள்ளனர்.

பெய்ஜிங் நகர செய்தித்தொடர்பாளர் ஜூ ஹிஜியான் கூறுகையில், “கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட பரிசோதனையில் இதுவரை 106 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெய்ஜிங்கில் நிலைமை நாளுக்கு நாள் தீவிரமடைந்து, மோசமாகி வருவதால், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

சீனாவின் தொற்றுநோய் தடுப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை தொற்றுநோய் தடுப்பு மருத்துவர் வூ ஜூன்யூ , சீனாவின் நாளேடான பீப்பிள்ஸ் டெய்லிக்கு அளித்த பேட்டியில், “பெய்ஜிங் நகரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கிறது. நாளுக்கு நாள் புதிதாக கரோனா நோயாளிகள் வருகிறார்கள். ஜின்ஃபாடி சந்தைக்குச் சென்றவர்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் பரவலைத் தடுக்க தீவிரமாக முயன்று வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

ஹெய்தான் மாவட்டத்தில் உள்ள பெங்டாய் பகுதியில் உள்ள 21 குடியிருப்புப் பகுதிகளை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளளனர். இந்தப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜின்ஃபாடி சந்தையைச் சுற்றி இருக்கும் பல்வேறு குடியிருப்புகளையும் பெய்ஜிங் நிர்வாகம் மூடி தனிமைப்படுத்தியுள்ளது.

கடந்த 56 நாட்களாக பெய்ஜிங்கில் எந்தவிதமான கரோனா நோயாளியும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது 100க்கும்மேல் அதிகரித்து இருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள சூழல் குறித்தும், கரோனாவின் புதிய நோய்திரளாக பெய்ஜிங் மாறிவிட்டதா என்பது குறித்து விரிவான அறிக்கை அளிக்கக் கோரி உலக சுகாதார அமைப்பு அறிக்கை கேட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x