Last Updated : 05 Aug, 2015 10:40 AM

 

Published : 05 Aug 2015 10:40 AM
Last Updated : 05 Aug 2015 10:40 AM

பதற்றங்கள் நிறைந்த வங்கதேசம் - 1

கொஞ்சநஞ்சமல்ல, நாற்பது ஆண்டுகள்! தங்களுக்கிடையே உண்டான எல்லைப் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது இந்தியாவுக்கும் வங்கதேசத் துக்கும். என்றாலும் இப்படி ஒர் ஒற்றுமையை இப்போது கண்டதே கூட ஒரு சாதனைதான். வங்கதேச தலைநகரான டாக்காவில் இருதரப்புப் பிரதிநிதிகளும் இது தொடர்பான ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டனர்.

1974-லிலேயே இது தொடர்பான கோணங்கள் வரையறுக்கப்பட்டன. என்றாலும் சமீபத்தில்தான் இந்திய நாடாளுமன்றம் இதை ஏற்றுக் கொண்டது. அந்த விதத்தில் உலக அரங்கில் இது தற்போதைய இந்திய அரசின் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இருநாடு களுக்குமிடையே உள்ள பொருளாதாரப் பரிவர்த்தனைகள் அதிகமாகி இருக்கின்றன.

இந்த உடன்படிக்கை நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல, இப்போது வங்கதேச பிரதமராக உள்ள ஷேக் ஹசீனாவுக்கும் ஒரு தலைநிமிர்வு தான்.

ஒரு பெரும் குற்றச்சாட்டில் மூழ்கி இருக்கிறது தற்போதைய வங்கதேச அரசு. சென்ற ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஹசீனாவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. என்றாலும் அந்தத் தேர்தலை முக்கிய எதிர்கட்சி புறக்கணித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்கட்சிகள் நடத்திய வெறித் தாக்குதலில் பலர் இறந்தனர். பதற்றத்தில் தள்ளப்பட்டது வங்க தேசம். அந்த விதத்தில் ஆக்கபூர்வ மான ஒரு இமேஜ் தன் மீது படிவதை ஹசீனா மிகவும் விரும்புகிறார்.

இந்திய - வங்கதேச எல்லையில் ‘162 என்க்ளேவ்கள்’ எனப்படும் நிலத்திட்டுகள் உள்ளன. (ஒரு நாட்டின் எல்லைக்குள் அமைந்த மற்றொரு நாட்டின் பகுதியை என்க்ளேவ் என்பார்கள்).

சமீபத்திய உடன்படிக்கை காரணமாக இந்தப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஒரு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய எல்லைகளுக்கு உட்பட்டு ‘‘நீங்கள் இந்தியாவில் வசிக்க விரும்பு கிறீர்களா? அல்லது வங்கதேசத் தில் வசிக்க விரும்புகிறீர்களா? அதை நீங்களே இப்போது தீர்மானித்துக் கொள்ளலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்குத் தகுந்தாற்போல் அவர் களுக்கு அந்தந்த நாடுகள் பாஸ் போர்ட் வழங்கி அங்கீகரிக்கும்.

ஆக சீனாவுடனும், பாகிஸ் தானுடனும் நடத்த முடியாத ஒரு சாதனை (எல்லைகள் குறித்த தீர்மானம்) வங்கதேசத்துடன் நடந் தேறியுள்ளது.

இப்படிச் சொன்னால் ‘‘வங்க தேசம் தனி நாடாக உருவாவதற்கு இந்தியா பெரும் உதவிகள் செய்திருக்கிறது. இதனால் நம் இரு நாடுகளுக்கிடையே ஆழமான நட்பு நிலவுகிறது. எனவே வங்கதேசத்துடன் நமக்கு உண்டான ஒப்பந்தத்தை சீனா, பாகிஸ்தா னுடன் ஒப்பிடவேகூடாது’’ என்று சிலர் கூறலாம். இதற்கு ஓர் உதாரணமாக 1972ல் இருநாட்டுத் தலைவர்களும் இணைந்து கையெழுத்திட்ட நட்பு ஒப்பந்தத் தைக் கூட குறிப்பிடலாம். ஆனால் இப்படி நினைப்பவர்கள் வங்கதேசத்தில் மாறிவரும் உணர்வுப் போராட்டங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளத் தவறி விட்டதாகவே அர்த்தம்.

வேடிக்கை என்னவென்றால் மேலே குறிப்பிட்ட ஒப்பந்தமே இந்தியாவுக்கு எதிரான போக்கை வங்கதேச தலைவர்கள் மேற்கொள்ளக் காரணமாக அமைந்து வந்தது!

இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா என்பது மிக முக்கியப் பிரச்னையாக - சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குமூலமாக கூட ஆவதற்கான சாத்தியக் கூறுகள் பளிச்சென்று உருவாயின.

சொல்லப்போனால் வங்கதே சத்தில் ஒவ்வொருமுறை தேர்தல் நடைபெறும் போதும் இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் கொம்பு சீவப்படுகின்றன.

தன் நாட்டுக்கு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் முஜிபுர் ரஹ்மான், நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் ஒன்பதாவது பிரிவின்படி இருநாடுகளில் எதற்கு “ஆபத்து’’ ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்வதில் மற்ற நாடு கலந்து ஆலோசிக்கப்பட வேண்டும். ‘‘ஆபத்து’’ என்றால் என்ன? பிற நாடுகளிடமிருந்தா? உள்நாட்டிலிருந்தே அந்த அரசுக்கா? இதற்கான விளக்கம் அந்த ஒப்பந்தத்தில் இல்லை. தவிர வங்கதேசத்தின் தனித்துவத்தை இதுபோன்ற ஒப்பந்தம் குறைத்து விடுவதாகவே பல கட்சிகள் பிரசாரம் செய்தன. நடுவில் 1975-ல் வங்கதேச எல்லையில் இந்திய ராணுவம் பெருமளவில் குவித்து வைக்கப்பட்டதாக வேறு ஒரு வதந்தி பரவி இந்தியாவுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை அதிகரித்தது.

இதனாலெல்லாம் 1975க்குப் பிறகு (முஜிபுர் ரஹ்மான் உருவாக்கிய கட்சியான) அவாமி லீகைத் தவிர மற்ற எல்லா அரசியல் கட்சிகளும் ஒப்பந்தத்தை நீக்கக் கோரின.

அவாமி லீக்கின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஹஸீனா கூட இந்தியாவுக்கெதிர்க் குழுவில் சேர்ந்து விட்டார் எனலாம். தான் பதவிக்கு வந்தால் இந்த அமைதி ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என்று அவரும் அறிவித்தார்.

வங்கதேசத்தைப் பொருத்த வரை அதன் முக்கியக் கட்சிகளின் ஒன்றான பி.என்.பி. (வங்கதேச தேசியக் கட்சி) ‘இஸ்லாம் அடிப்படையிலான’ வங்கதேசம் அமைய வேண்டும் என்று கருத்து கொண்டது. அவாமி லீக் ‘மதச் சார்பற்ற ‘ வங்கதேசத்துக்கு குரல் கொடுக்கிறது.

மேலோட்டமாகப் பார்க்கும் போது வங்கதேச தலைமை இந்தியாவுடன் நல்லுறவுடன்தான் இருந்து வந்திருக்கிறது என்பதை யும், அதே சமயம் அண்டை நாடான வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் வலிவடைந்து வருகிறது என்பதையும் இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது.

வங்கதேசம் சென்ற இந்தியப் பிரதமர் வேறொரு பஞ்சாயத்தில் ஈடுபடுவாரோ என்ற யூகம் உலக அரங்கில் நிலவியது. அது வங்கதேசத்தின் இரண்டு அரசியல் தலைமை பெண்களுக்கு நடுவே பல ஆண்டு காலமாக நடந்துவரும் பனிப்போர். ஹசீனா மற்றும் கலீதா ஆகிய இந்த இருவரும் அந்த நாட்டின் அசைக்க முடியாத சக்திகளாக வலம் வருகிறார்கள். மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கிறார்கள்.

எதனால் அவர்களுக்கிடையே இந்தப் பகைமை?

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x