Last Updated : 26 May, 2020 03:13 PM

 

Published : 26 May 2020 03:13 PM
Last Updated : 26 May 2020 03:13 PM

அமெரிக்காவின் கிராமப்புறப் பகுதிகளிலும் கரோனா பாதிப்பு அதிகமாகிறது: ஆபத்தில் கருப்பரின, ஏழைமக்கள்

அமெரிக்காவில் உள்ள பெருநகரங்கள், சிறு நகரங்கள் போக தற்போது அமெரிக்காவின் கிராமப்புற ஊர்களிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கையும் மரண விகிதங்களும் அதிகரித்து வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது அமெரிக்காவின் கரோனா பாதிப்பு, மரணம் அதிகமுள்ள நியூயார்க்கை விடவும் ஊரகப்பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை விரைவு கதியில் அதிகமாவதாகவும் மரண விகிதங்கள் எகிறுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,06, 226 ஆக அதிகரிக்க மரண எண்ணிக்கை 1 லட்சத்துக்கு அருகில் 99,805 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நியூயார்க், மிச்சிகன், லூசியானா, வாஷிங்டன் ஆகியவற்றின் 14 ஊரகப் பகுதிகள் கரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் ஆய்வு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களைத் தாக்கி வரும் கரோனா அந்நாட்டின் ஊரகப்பகுதிகளிலும் வெகுவிரைவில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் ஏராளமான விளை நிலங்கள், இறைச்சி பேக் ஆலைகள், உள்ளன, இப்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளும் குறைவு.

இந்த ஊரகப்பகுதிகளில் 6 கோடி பேர் வசிக்கின்றனர், பெரும்பாலும் கருப்பரினத்தைச் சேர்ந்தவர்கள். மக்கள் தொகையில் பெரும்பாலானோர் ஏழைகள், இவர்களுக்கு ஏற்கெனவே நீரிழிவு, கடும் உடற்பருமன் ஆகியவை உள்ளன. பெரும்பாலோனோர் முதியவர்கள். இதில் புலம்பெயர்ந்தோர் மற்றும் நாட்டின் உணவு தொழிற்சாலைகள் நடப்பதற்குக் காரணமாக இருக்கும் ஆவணப்படுத்தப்படாத ‘அத்தியாவசிய’பணியாளர்கள் ஆகியோரும் இப்பகுதிகளில் அதிகம். இந்தச் சமூகத்தினரை அணுகுவது கடினம், பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டப் பகுதியில் வாழ்கின்றனர்.

ஒஹியோ மாகாண கெண்ட் ஸ்டேட் பல்கலைக் கழக பேராசிரியர் தாரா ஸ்மித் கூறும்போது, “அதாவது ஒரு அலையாக ஊரக அமெரிக்கா முழுதும் பரவும் ரகம் இல்லை இது வந்து வந்து போகும் கரோனா ஹாட்ஸ்பாட்களாக மாறும். இதை எப்படி சிறந்த முறையில் நிர்வகிக்கப் போகிறார்கள் என்பது எனக்கு சந்தேகமாகவே உள்ளது” என்றார்.

சிறிய கிராமப்புறப் பகுதிகளில் ஒட்டுமொத்தமாக வைரஸ் கடந்த மாதத்தில் பரவியுள்ளது. இப்பகுதிகளில் சுகாதார அமைப்புகள் பெரிதாக இல்லை. சிறிய அளவில் கரோனா அதிகரித்தாலும் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று வாஷிங்டன் போஸ்ட் ஆய்வு தெரிவிக்கிறது. 25 மாநிலங்களில் 180 ஊரகப்பகுதிகளில் டெஸ்ட் நடக்கவில்லை என்பதால் பரவும் அபாயம் இருப்பதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இன்னும் கண்டுபிடிக்கப்படாத கரோனா தொற்றுக்கள் இப்பகுதியில் இருக்கக் கூடும் என்று டெக்சாஸ் பல்கலைக் கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்பகுதிகளில் வறுமை, வாகனம் சென்றடைய முடியாத தன்மை, நெரிசலான வீடுகள் ஆகியவற்றால் இவர்களுக்கு கரோனா பரவினால் மரணம்தான் ஏற்படும் குணமடைய வாய்ப்பில்லை என்கிறது வாஷிங்டன் போஸ்ட்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x