Published : 02 May 2020 08:36 PM
Last Updated : 02 May 2020 08:36 PM

கரோனா விவகாரம்; சீனா மீது கூடுதல் வரி விதிக்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

கரோனா வைரஸ் தொடர்பாக சீனா உண்மை நிலையை மறைத்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டிவந்த நிலையில், தற்போது சீனா மீது கூடுதல் வரிவிதிப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “கரோனா வைரஸ் தொடர்பாக சீனா மேற்கொள்ளும் செயல்பாடுகள் எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. தற்போது கரோனா வைரஸால் 182க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து சீனா உண்மை நிலையை மறைத்து வருகிறது. இந்தச் சூழலில் சீனா மீது கூடுதல் வரிவிதிப்பை நடைமுறைப்படுத்துவதான் எங்கள் முன்னால் இருக்கும் தேர்வு” என்று தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ கூறும்போது, “சீனா மிக வெளிப்படையாக நடந்து வருவதாகக் கூறுகிறது. ஆனால், வைரஸ் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்கிறது.

சீனா தற்போதைய சூழலில் மிகுந்த பொறுப்புடனும் நம்பகத் தன்மையுடன் செயல்பட வேண்டும். எப்படி சீனாவில் வைரஸ் பரவியது என்பது கண்டறியப்பட வேண்டும். அதுவே இனி அப்படி ஒரு நிகழ்வு நடைபெறாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கையாக அமையும். சீனாவில் என்ன நடந்தது என்பதை அறிய உலக நாடுகளுக்கு உரிமை இருக்கிறது” என்று தெரிவித்தார்.

அமெரிக்கா-சீனா இடையே கடந்த இரண்டு வருடங்களாக வர்த்தகப் போர் நிலவி வருகிறது. சீனப் பொருட்களுக்கு அமெரிக்காவும் அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவும் மாறி மாறி வரியை அதிகரித்து வந்தன. இதனால் உலகளாவிய அளவில் பொருளாதாரச் சூழல் நெருக்கடிக்கு உள்ளானது.

இந்தச் சூழலில்தான் சீனாவில் கரோனா வைரஸ் பரவியது. தற்போது உலக நாடுகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கரோனா எவ்வாறு பரவியது என்பது தொடர்பான விவரங்களை அமெரிக்கா ஆரம்பம் முதலே கேட்டு வருகிறது.

சீனாவில் வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x