Published : 30 Apr 2020 04:39 PM
Last Updated : 30 Apr 2020 04:39 PM

புலம்பெயர் தொழிலாளர்களைக் காப்பது அரசின் கடமை

புலம்பெயர்ந்த தொழிலாளர்களில், பதிவு செய்யப்படாதவர்களையும், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களையும் அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப சில நாடுகள் முடிவெடுத்திருப்பதைத் தடுத்து நிறுத்துமாறு ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரஸிடம், வங்கதேசத்தைச் சேர்ந்த 16 சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தியிருக்கின்றன. தங்கள் நிபந்தனைக்கு ஒத்துழைக்காத நாடுகளுடனான தொழிலாளர் தொடர்பான உறவுகள் மாற்றியமைக்கப்படும் என்கிற ரீதியிலான அழுத்தங்களை அந்நாடுகள் கொடுக்கின்றன. அப்படியான அழுத்தத்தைச் சந்திக்கும் நாடுகளில் வங்கதேசமும் ஒன்று.

பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சியால் ஒட்டுமொத்த உலகமும் முடங்கிக் கிடக்கும் ஒரு தருணத்தில், வளர்ந்துவரும் நாடுகளும், பலவீனமான சுகாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகளும் ஒரு பெருஞ்சுமையைச் சுமக்கும் கட்டாயத்தில் இருக்கும் நிலையில், சில நாடுகள் குறிப்பாக, வளமிக்க வளைகுடா நாடுகள் இப்படி அழுத்தம் தருவது, தார்மீக அடிப்படையிலான திவால் நிலை அன்றி வேறில்லை.

புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரிந்துவரும் நாடுகளில் வாழும் பிற மக்களைப் போலவே சமமாக நடத்தப்படும் உரிமை பெற்றவர்கள்; தரமான மருத்துவ சிகிச்சை சேவைகளைப் பெறும் உரிமை பெற்றவர்கள் என்று அனைத்துப் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளைக் காப்பதற்கான சர்வதேச மாநாட்டின் அறிக்கை தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அப்படி இருந்தும், மத்திய ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் (வங்க தேசத்தவர்கள் உட்பட), வேலையிழந்து, நெரிசலான முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பை அதிகம் எதிர்கொள்வதுடன், வீடு திரும்ப முடியாமலும், தங்கள் குடும்பங்களுக்குப் பணம் அனுப்ப முடியாமலும் வாடிக் கொண்டிருக்கிறார்கள். பொதுமுடக்கம் முடிவுக்குவந்த பின்னர், வங்கதேசத் தொழிலாளர்கள் திரும்ப அழைத்து வரப்படுவார்கள் என்று வங்கதேச அரசு கூறியிருக்கிறது. எனினும், இன்றைய தேதியில் வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த நாட்டிலிருந்தும், பணிபுரியும் நாட்டிலிருந்தும் எந்தவிதமான உத்தரவாதமும் கிடைக்காமல் கைவிடப்பட்ட நிலையில் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது, சுமார் ஒரு கோடி வங்க தேசத்தவர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகிறார்கள். அவர்கள் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கில் டாலர்களை வங்கதேசத்துக்கு அனுப்புகிறார்கள். இந்நிலையில், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வங்கதேச அரசுக்கு இருக்கிறது.

ஆனால், இதுபோன்ற கோரிக்கைகளைப் பரிசீலிப்பதைக் காட்டிலும், புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் பணியில் நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்றும், அவர்கள் கரோனா பரவலை எதிர்கொள்வதற்குத் தன்னார்வ நிதி அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பிடம் வங்கதேச அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, வெளிநாடுகளில் வசிக்கும் வங்க தேசத்தவர்களுக்கான நலத்துறை அமைச்சகம், பொறுப்பற்ற முறையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. வெளிநாடுகளில் வசிக்கும் தொழிலாளர்கள் கரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துவிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு 3 லட்சம் டக்காக்கள் (வங்கதேச கரன்ஸி) இழப்பீடாக வழங்கப்படும் என்று அந்த அமைச்சகம் அறிவித்திருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள், கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி, வாழ்க்கையை நடத்துவது எப்படி என்பதற்கான எந்தத் திட்டத்தையும் அது முன்வைக்கவில்லை.

இந்தச் சூழலில், வங்கதேச புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அரசு குரல் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். நாடு கடத்தப்படும் அபாயத்திலிருந்து தொழிலாளர்களைக் காப்பாற்றி, வேலை பார்க்கும் நாடுகளிலேயே அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், அவர்கள் விரும்பும்பட்சத்தில் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அந்நாடுகளுடனும், சர்வதேச அமைப்புகளுடனும் ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும்.

- வங்கதேச நாளிதழான ‘தி டெய்லி ஸ்டார்’ இதழில் வெளியான தலையங்கம்.
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x