Published : 23 Apr 2020 04:05 PM
Last Updated : 23 Apr 2020 04:05 PM

பெருந்தொற்று காலம்; என்ன செய்கின்றன பாகிஸ்தான் ஊடகங்கள்?

1918 முதல் 1920 வரை 5 கோடி பேரைப் பலிகொண்ட, ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’, ஸ்பெயினில் தோன்றியதல்ல. அமெரிக்க ராணுவக் கோட்டைகளில் உருவாகி ஐரோப்பாவில் பரவியிருக்கலாம். முதலாம் உலகப் போரின்போது பதுங்குகுழிகளில் அருகருகே இருந்த வீரர்கள் மூலம் அது விரைவாகப் பரவியிருக்கலாம். அந்தக் காய்ச்சலால் ஸ்பெயின் மட்டுமே அதிகமாகப் பாதிக்கப்பட்டது என்பதில்லை. அந்தப் பெருந்தொற்றை ஸ்பெயினுடன் இணைத்து இன்றைக்கு நாம் பேசுவதற்கு முக்கியக் காரணம், ஊடகத் தணிக்கையின் விநோத விளைவுதான்!

பெயர்க் காரணம்

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை அந்தக் காய்ச்சல் சூறையாடியபோது, போர்க்காலத்தில் மக்களின் மன உறுதியைக் குலைக்கக் கூடாது எனும் காரணத்தை முன்வைத்து அந்தப் பெருந்தொற்று தொடர்பான செய்திகளை அந்நாடுகள் தணிக்கை செய்தன. அந்தப் போரில் நடுநிலை வகித்த நாடான ஸ்பெயினுக்கு இதுபோன்ற கட்டாயம் ஏதும் இல்லாததால், அந்தக் காய்ச்சல் பரவிய விதம், அதனால் நேர்ந்த அதீத உயிரிழப்புகளைப் பற்றியெல்லாம் அந்நாட்டு ஊடகங்கள் வெளிப்படையாகச் செய்தி வெளியிட்டன. ஸ்பெயின் மன்னருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் செய்திகள் மேலும் பரவலாக வெளியாகின.

உலக அளவில் அதுதொடர்பான செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில், ஸ்பெயினிலிருந்து பரவலாக வெளியான செய்திகள் அந்நாட்டில்தான் அந்நோய் தோன்றியது என்று பலர் நம்புவதற்கு வழிவகுத்தன. அப்படித்தான் அந்தப் பெயரும் நிலைபெற்றது.

இன்றைக்கும் அதே நிலை
உலகளாவிய ஒரு நெருக்கடியின்போது ஊடகத்தின் பங்கும், வெளிப்படைத்தன்மையும் எத்தனை முக்கியமானவை என்பதை இந்த வரலாறு எடுத்துக்காட்டுகிறது. சரியாக ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், உலக மக்களை ‘கோவிட்-19’ அச்சுறுத்திக் கொண்டிருக்கும்போது, நெருக்கடியைச் சமாளிக்க, பொது அமைதியைக் காக்க, பதற்றத்தைக் குறைக்க என்று காரணங்களைச் சொல்லிக்கொண்டு அரசுகள் மீண்டும் செய்திகளை முடக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. பெருந்தொற்று சமயத்தில், செய்திகளை இவ்வாறு தணிக்கை செய்வது ஆபத்தாக அமையும்.

இன்றைக்கு, மத்திய கிழக்கு நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில் நாளிதழ் வெளியீடு நிறுத்திவைக்கப் பட்டிருக்கிறது. கரோனா வைரஸ் பரவலின் வீரியத்தை இராக் மூடி மறைக்கிறது என்று செய்தி வெளியிட்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் உரிமத்தை அந்நாடு தற்காலிகமாக முடக்கி வைத்திருக்கிறது. அரசை விமர்சித்து வெளியான செய்திகளை நீக்குமாறு ரஷ்ய ஊடகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில், மருத்துவப் பணியாளர்கள், குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள் பத்திரிகையாளர்களிடம் பேசக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஊடகத் தணிக்கையின் விளைவுகள்
செய்திகளை இப்படி முடக்குவது ஆபத்தானது. ‘சீனாவில் ஊடகத் தணிக்கை இல்லை எனில், கரோனா வைரஸ் தொடர்பான செய்திகள் முன்பே பரவியிருக்கும்; அதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்; பெருந்தொற்றாக மாறியிருக்கும் சூழலையும் தடுத்திருக்க முடியும்’ என்று ‘ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்’ எனும் அமைப்பு கூறியிருக்கிறது.

சமூக ஊடகங்களின் யுகத்தில் பரவிவரும் ‘கோவிட்-19’, ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ நோயைவிடவும் அதிகமான ஊடகச் சவால்களை உருவாக்கியிருக்கிறது. சமீபத்தில், கரோனா வைரஸ் தொடர்பாகத் தவறான தகவல்களும், சதிக் கோட்பாடுகளும் அதிகரித்துவருவதைச் சுட்டும் வகையில் ‘மிஸ்இன்ஃபோ-டெமிக்’ (misinfo-demic) எனும் அறிவிப்பை ஐநா பொதுச் செயலாளர் வெளியிட்டார். இதை எதிர்கொள்ள ஒரு தகவல்தொடர்புத் திட்டத்தை ஐநா தொடங்கவிருக்கிறது. எனினும், இன்றைக்குத் தேவை பொறுப்பான, தடங்கலற்ற இதழியல் பணிதான்.

பாகிஸ்தான் அரசின் நிலைப்பாடு
செய்திகள் தடங்கலின்றி வழங்கப்படுவதற்கும், அச்செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் இடையிலான சமநிலையை அரசுகள் கைக்கொள்ள வேண்டும். இது கடினமான பணிதான். மேலும், சர்வாதிகாரப் போக்குகளைக் கொண்ட பாகிஸ்தானைப் போன்ற நாடுகளில், போலிச் செய்திகள் தொடர்ந்து பரவுவது, ஊடகத் தணிக்கைக்கு வலு சேர்க்கிறது.

சவுதி அரேபியாவில் போலிச் செய்திகள் அல்லது வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கை, தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று ஹங்கேரி அரசு பிறப்பித்த அவசர ஆணை போன்றவை தங்கள் மீதான நேரடித் தாக்குதல்கள் என்றே பத்திரிகையாளர்கள் கருதுகிறார்கள்.

பாகிஸ்தானில், ‘கோவிட்-19’ நெருக்கடி தொடர்பான சூழல், ஊடகத் தணிக்கையைத் தீவிரப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. ஏற்கெனவே, பிரதான ஊடகங்கள், சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் மீதான கட்டுப்பாட்டைப் பாகிஸ்தான் அரசு கடைப்பிடித்துவருகிறது. தவிர, ‘குடிமக்கள் பாதுகாப்பு விதிமுறைகள் (இணையவழி தீங்குகளுக்கு எதிரானது)-2020’ எனும் மசோதாவுக்குப் பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ஊடகச் சுதந்திரம் சீரழிந்து வருவது தொடர்பாக, ஐரோப்பிய ஆணையம் வெளியிட்ட கருத்துகளையும் பாகிஸ்தான் கடுமையாக விமர்சித்து வருகிறது.

‘கோவிட்-19’ பின்னணியில், இப்படி ஊடகங்கள் தணிக்கை செய்யப்படுவது நிச்சயமாகப் பின்விளைவுகளை ஏற்படுத்தும். அரசால் மவுனமாக்கப்படும் பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.

நிலைமையை மாற்ற முடியும்
பொதுத் தளத்தில் துல்லியமான தகவல்கள் இல்லை எனும் சூழல், மக்களிடம் விழிப்புணர்வின்மையை ஏற்படுத்தும். ஊரடங்கு சமயத்தில் இது பொறுமையின்மையை ஏற்படுத்துவதுடன், வைரஸ் பரவல் தவிர்க்க முடியாததாகவும் ஆகிவிடும். நிலைமை மோசமடைந்துவரும் நிலையில், இந்தப் பெருந்தொற்றின் முழுமையான பொருளாதார விளைவுகள் வெளிப்படையாகவே தெரிகின்றன. இந்நிலையில், ஊடகச் செய்திகளை மேலும் தணிக்கை செய்வது, பொதுக் கருத்துக்கும் தனிப்பட்ட அனுபவங்களுக்கும் இடையிலான முரண்பாட்டுக்கு வழிவகுக்கும். அது அரசுகளின் மீதான நம்பகத் தன்மையைக் குறைக்கும். இந்த முரண்பாடானது, தணிக்கையின் வீச்சை வெளிப்படுத்துவதுடன், மக்களிடம் மனக்கசப்பையும், ஒத்துழையாமை உணர்வையும் ஏற்படுத்திவிடும்.

இந்தப் போக்கை மாற்றுவதற்கான காலம், இன்னும் கைமீறிவிடவில்லை. தேவையான தகவல்களையும், பாதுகாப்பு சாதனங்களையும் பத்திரிகையாளர்களுக்குக் கிடைக்கச்செய்வதன் மூலம், தரமான செய்திகள் வெளியாவதை அரசால் உறுதிசெய்ய முடியும். அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் விசிலூதிகளாகச் செயல்படும் பத்திரிகையாளர்களை, முக்கியமான தரவுகளைச் சேகரிப்பவர்களாகக் கருதுவதன் மூலம், நகர்ப்புறக் குடியிருப்புகளிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் கரோனா வைரஸ் பரவலைக் கண்டறிய ஊடகங்களை அரசு பயன்படுத்திக்கொள்ள முடியும். நம்மிடம் போதுமான சுகாதாரக் கட்டமைப்பு இல்லாத நிலையில், இப்படி சில வாய்ப்புகளும் இருக்கின்றன.

ஊடகங்கள், இந்தப் பெருந்தொற்று தொடர்பான செய்திகளைச் சரியான முறையிலும், உண்மைகளின் அடிப்படையில் உடனுக்குடனும் வெளியிட வேண்டும். இதன் மூலம், தனது குறைபாடுகளாலும், ஆட்சியாளர்களால் மதிப்பிழக்கச் செய்யப்பட்டதாலும் மக்களிடம் இழந்திருந்த நம்பிக்கையை ஊடகங்கள் மீட்டெடுக்க முடியும்.

- ஹூமா யூசுப்
நன்றி: டான் (பாகிஸ்தான் நாளிதழ்) | தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x