Published : 23 Apr 2020 06:59 AM
Last Updated : 23 Apr 2020 06:59 AM

கிம் ஜாங் உன் உடல்நிலை பாதிப்பு: வடகொரியாவின் அடுத்த அதிபர் யார்?

உலக நாடுகளை ஒப்பிடும்போது, வட கொரியா குறித்த தகவல்கள் அவ்வளவாக வெளியே வருவது கிடையாது. அங்கு கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதால், அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் தகவல்களை பொதுவெளிகளில் பகிர்வது தேச துரோக குற்றமாக கருதப்படுகிறது. மீறி வெளியே கூறினால் மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், அரசு விவகாரங்கள் பெரும்பாலும் வெளி உலகுக்கு தெரியாது. இந்நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வெளியாகி உள்ளன.

அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பிறகு அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்திருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ மூலம் இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தங்கைக்கு வாய்ப்பு

அதிபர் கிம் ஜாங் உன் தனதுஅரசியல் வாரிசாக யாரையும் அறிவிக்கவில்லை. எனினும்,அவரது குடும்ப உறுப்பினர்களிலேயே அரசியலில் ஈடுபட்டிருப்பது கிம் ஜாங் உன்னின் தங்கை கிம் யோ ஜாங் மட்டுமே. கிம் ஜாங் உன் அதிபராக பதவியேற்றது முதலாக அவருக்கு கிம் யோ ஜாங் தனி உதவியாளராக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி, ஆளும் கட்சியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும் அவர் பதவி வகித்து வருகிறார். எனவே, கிம் யோ ஜாங் அடுத்த அதிபராக பதவியேற்பார் என பரவலாக பேசப்படுகிறது.

தங்கை கிம் யோ ஜாங்கை தவிர, அதிபர் கிம் ஜாங் உன்னின் மூத்த மகன் (பெயர் தெரியவில்லை), கிம் ஜாங் உன்னின் அண்ணன் மகன் கிம் ஹன் சோல், கிம் ஜாங் உன்னின் தம்பி கிம் ஜாங் சவுல் ஆகியோரின் பெயர்களும் அதிபர் பதவிக்கு அடிபடுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x