Published : 22 Apr 2020 01:59 PM
Last Updated : 22 Apr 2020 01:59 PM

சோதனைக் கூடத்திலிருந்து அல்ல, வவ்வால்கள் மூலம் பரவியதே கரோனா- உலகச் சுகாதார அமைப்பு: மீண்டும் சீனாவை காக்கிறதா?

வூஹான் வைராலஜி சோதனை மையம். | ஏ.எஃப்.பி.

சீனாவின் கரோனா தோற்றுவாயான வூஹானில் உள்ள வைரஸ் ஆய்வு மையத்திலிருந்து கரோனா வைரஸ் வெளியேறி பெரிய கொள்ளை நோய்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்கா குற்றம்சாட்ட, நோபல் பரிசு வென்ற விஞ்ஞானியும் இந்தக் கோட்பாட்டை ஆமோதிக்க தற்போது உலகச் சுகாதார அமைப்பு மீண்டும் பழைய கோட்பாடான வவ்வால்களிடமிருந்துதான் தோன்றியிருக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு எதிராக சதிக்கோட்பாடுகள் பரவ சீனா இதனைக் கடுமையாக மறுத்து வருவது ஒருபுறமிருக்க, உலகச் சுகாதார அமைப்பு சீனாவுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது என்ற குற்றச்சாட்டில் அமெரிக்கா அந்த அமைப்புக்கான தன் பங்களிப்பை நிறுத்தி வைத்துள்ளது.

மேலும் தேவைப்பட்டால் சீனாவுக்கு ஒரு குழுவை அனுப்பி சீனாவின் சோதனைக் கூடத்திலிருந்துதான் கரோனா பரவியதா என்பதை உறுதி செய்வதாகவும் அமெரிக்கா கூறி வருகிறது, எனவே சீனாவின் கூடத்திலிருந்துதான் தெரியாமல் வெளியில் பரவிவிட்டது என்ற செய்திகள் பரவலாகிவரும் நிலையில் உலகச் சுகாதார அமைப்பு கூறியிருப்பதாவது:

”இது தொடர்பாக கிடைத்திருக்கும் அனைத்து ஆதாரங்களும் வைரஸ் விலங்குகள் மூலம்தான் பரவியிருக்கிறது என்பதைத்தான் அறிவிக்கிறது. அறிவியல் பரிசோதனைக் கூடங்களிலிருந்து திட்டமிட்டுப் பரப்பப்பட்டதற்கான ஆதாரமோ தானே தவறுதலாக வெளியே பரவிவிட்டதற்கான ஆதாரங்களோ இல்லை” என்று உலகச் சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஃபடேலா செய்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது குறிப்பாகக் கூற வேண்டுமெனில் வவ்வால்களிடமிருந்துதான் இது பரவியுள்ளது. ஆனால் வவ்வால்களிடமிருந்து மனிதருக்கு கரோனா எப்படி பரவியது என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை என்கிறார் அவர்.

பிரெஞ்சு நோபல் பரிசு விஞ்ஞானி லுக் மோன்டெய்னர் பிரெஞ்ச் சி-நியூஸில் கரோனா வைரஸ் வூஹானின் சோதனைக்கூடத்திலிருந்து வெளியே பரவியதுதான் என்றார். எய்ட்ஸ் வைரஸுக்கு எதிராக வாக்சைன் தயாரிப்பதில் அமெரிக்காவுடன் கடும் போட்டியிலிருக்கும் சீனா எய்ட்ஸ் வாக்சைன் தயாரிப்பு ஆராய்ச்சியின் போது கரோனா வைரஸ் வெளியே பரவியது என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.

ஆனால் வூஹான் வைரஸ் ஆய்வு மையம் இதனை கடுமையாக மறுத்தது. உலக நாடுகள் அனைத்தும் சீனா கரோனா எங்கிருந்து பரவியது என்ற தகவலை வெளியிட வேண்டும் என்று அந்நாட்டுக்கு கடும் அழுத்தங்களை அளித்து வந்தாலும், சீனா எதற்கும் மசியாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

-தி இந்து பிசினஸ்லைன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x