Last Updated : 17 Apr, 2020 09:17 AM

 

Published : 17 Apr 2020 09:17 AM
Last Updated : 17 Apr 2020 09:17 AM

அமெரிக்க பொருளாதாரத்தை இயல்புக்கு கொண்டுவர அவசரம்: அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட 3 கட்ட திட்டம் என்ன?

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் : கோப்புப்படம்

வாஷிங்டன்

கரோனா வைரஸின் பிடிக்குள் சிக்கியிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீ்ண்டும் இயல்புபாதைக்கு கொண்டுவர அதிபர் டொனால்ட் 3 கட்ட செயல் திட்டங்களை நேற்று அறிவித்தார்

ஆனால் பெரும்பாலான மாநில ஆளுநர்கள் கரோனா வைரஸ் பிடியிலிருந்து முழுமையாக விடுபடாத நிைலயில் எவ்வாறு திட்டங்களை செயல்படுத்துவது, அதிகமான பரிசோதனைகள் இன்னும் தேவை என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

அமெரிக்காவை கலங்கடித்து வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை அங்கு 32 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள், 6.77 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் கரோனா வைரஸுக்கு அஞ்சி தங்கள் மாநிலத்துக்குள் லாக்டவுனை பிறப்பித்து பாதுகாத்து வருகின்றன

ஆனால், அமெரிக்காவில் நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட 9 மாநிலங்களில்தான் கரோனா வைரஸின் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் தொடர்ந்து முடங்கி இருப்பது, மக்கள் வீ்ட்டுக்குள் இருந்து வருகிறது ஆகியவை குறித்து ஆலோசித்த அதிபர் ட்ரம்ப் பொருளாதாரத்தை இயல்பு பாதைக்கு திரும்பவைக்கும் 3 கட்ட செயல்திட்டங்களை அறிவித்தார்.

18 பக்கங்கள் கொண்ட அந்த 3கட்ட செயல்திட்டங்கள் குறித்து அதிபர் ட்ரம்ப் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது

“ நம்முடைய அடுத்த போர் என்பது, அமெரிக்காவை மீண்டும் பொருளாதாரப் பாதைக்கு கொண்டு செல்வதுதான். அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் இந்த மாதத்திலேயே தங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாகத் தெரிவித்தன. அமெரிக்கா முழுவதும் மீண்டும் திறக்கப்பட வேண்டும், அமெரிக்க மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். நீண்ட காலத்துக்கு மாநிலங்கள் லாக்டவுன் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை.

நீண்டகாலத்துக்கு லாக்டவுன் இருந்தால், மக்களின் உடல்நலன்தான் கெட்டுப்போகும். மக்கள் வீட்டுக்குள் இருப்பதால், குடும்ப வன்முறை அதிகரிக்கும், போதைபழக்கம் அதிகரிக்கும், மனரீதியாக பாதிக்கப்படுவார்கள், மதுவுக்கு அடிமையாவார்கள் இதுபோன்ற பல மோசமான விளைவுகள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் அமெரிக்க மக்கள் துணி்ச்சலாக வெளியே வந்து வேலைக்குச் செல்லலாம். அதேசமயம் அமெரிக்க மக்கள் ஏதேனும் உடல்நலத்தில் பாதிப்பு இருந்தால் வீட்டில் இருக்கவேண்டும், வெளியே செல்லும் போது சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும்

ஒவ்வொரு மாநிலங்களின் லாக்டவுனை தளர்த்துவது என்பது மிகவும் கவனமாகச் செய்ய வேண்டிய நடவடிக்கை. மாநிலஆளுநர்கள் இதில் வேகமாக முடிவெடுக்க வேண்டும். மூன்று கட்ட தி்ட்டங்கள் மூலம் அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் இயல்புபாதைக்கு கொண்டுவர திட்டமி்ட்டுள்ளேன். இந்த 3 கட்டங்களிலும் மக்கள் அதிகமான சுத்தம், சமூக விலகல், சோதனை செய்தல், பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்தல் அவசியமாகும்

முதல்கட்டத்தில் லாக்டவுன் நடவடிக்கையில் இருக்கும் மாநிலங்களில் மக்கள் அநாவசிய பயணத்தைத் தவிர்க்க வேண்டும், கூட்டமாக கூடுவதையும் தவிர்க்க வேண்டும். ரெஸ்டாரன்ட், வழிபாட்டு தலங்கள், விளையாட்டு அரங்கம் ஆகியவை கடும் கட்டுப்பாடுகளுடன், சமூக விலகலைக் கடைபிடித்து செயல்படலாம்.

இரண்டவது கட்டத்தில் கரோனா வைரஸ் மீண்டும் பரவாது என வாய்ப்புள்ள இடங்களில் மக்கள் தங்கள் பயணத்தை தொடரலாம். பள்ளிகள் திறக்கப்படலாம், மதுபான பார் போன்வற்றை இயக்கலாம்.

3-வது கட்டத்தில் கரோனா வைரஸ் பரவுவது குைறந்து வருவது, அதன் வளைகோடு சமமானத தெரிந்தால், மக்கள் சக மக்களோடு பேசுவதற்கும், பழகுவதற்கும் பொது இடங்களில் அனுமதிக்கலாம். ஆனால், சமூக விலக்கல் அவசியம். பணியிடங்களிலும் சமூகவிலகலை கடைபிடிக்கலாம் ஆனால் கட்டுப்பாடுகள் இருக்காது. பாதுகாப்பு இல்லங்கள், மருத்துவமனைகள் தடையின்றி செயல்படலாம் அங்கு மக்கள் சென்றுவரலாம். மதுபான விடுதிகள் தங்கள் ரூம்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

இதில் பாதிப்பு குறைந்த மாநிலங்கள் இந்த திட்டத்தை விரைவாக அமல்படுத்தலாம், கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநிலங்கள் நீண்ட காலம் காத்திருந்து அமல்படுத்தலாம்

இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்

ஆனால் அதிபரின் ட்ரம்ப் பேச்சைக் கேட்ட டெலாவேர் மாநிலஆளுநர் ஜான் கேர்னே, வெஸ்ட் விர்ஜினியா ஆளுநர் ஜிம் ஜஸ்டிஸ், நியூெஜர்ஸி ஆளுநர் பில்முர்பி ஆகியோர் இந்த திட்டங்களை இப்போது நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. மக்களுக்கு போதுமான அளவு பரிசோதனைகள் செய்து, கரோனா பாதிப்பு குறைந்தபின்புதான் எல்லைகளை திறக்க முடியும். இது கவனத்துடன், எச்சரிக்கையுடன் எடுக்க வேண்டிய முடிவு என்று தெரிவித்தனர்

மேலும் மாநிலங்கள் எல்லைகளை திறப்பதற்கு முன் அதிபர் ட்ரம்ப் அரசு, போதுமான அளவு பரிசோதனைக் கருவிகள், மருந்துகள், மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என ஆளுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x