Published : 10 Apr 2020 01:22 PM
Last Updated : 10 Apr 2020 01:22 PM

இத்தாலிக்கு இரண்டு மிகப்பெரிய துக்கங்கள் இன்று!

இத்தாலி தேசம் இன்று இரண்டு மிகப்பெரிய துக்கங்களை அனுசரிக்கிறது. ஒன்று, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட தினமான இன்றைய தினத்தை (ஏப்ரல்10) புனித வெள்ளியாக அனுசரிக்கிறார்கள். கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமைப் பீடமாகிய இத்தாலியில் மிக முக்கிய துக்க நாள் இது. இந்த நாளில், ‘இயேசு உலக மக்களுக்காக ரத்தம் சிந்தி இறந்தார்’ எனும் தங்களது நம்பிக்கையை எடுத்துக்காட்டும் விதமாக இத்தாலியர்கள் ரத்ததானம் செய்தும், உணவருந்தாமல் ‘ஒருத்தல்’ இருந்தும் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துவார்கள்.

இந்தப் புனிதமான நாளில் ரோம் நகரில் உள்ள தேவாலயங்களிலும் வாடிகன் நகரத்தில் உள்ள தூய பேதுரு பேராலயத்திலும் கூடி, இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் விதமாக ‘சிலுவைப் பாதை’ வழிபாட்டில் ஈடுபடுவார்கள்.

கத்தோலிக்கர்களின் தலைமை குருவான போப் ஆண்டவர் வாடிகன் நகரத்தில் உள்ள தூய பேதுரு பேராலயத்தின் முன்பாகக் கூடும் 1 லட்சத்துக்கும் அதிகமான இறைமக்கள் முன்பு திருப்பலி வழிபாட்டை நிறைவேற்றுவார். ஆனால், தற்போதிருக்கும் சூழ்நிலையில் தேவாலயங்களில் கூட முடியாவிட்டாலும் வாடிகனின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் மூலம் இந்தப் புனித வாரத்தின் வழிபாடுகளை வீட்டிலிருந்தபடியே மக்கள் காண வழிவகை செய்திருக்கிறார்கள். இருப்பினும் இத்தாலியின் வரலாற்றில் புனித வெள்ளிக்கு ஒன்று கூடி வழிபட முடியாமல் போன இன்றைய தினம் அவர்களைப் பெரும் துக்கத்தில் தள்ளியிருக்கிறது.

இரண்டாவது துக்கம், கரோனா வைரஸ் பாதிப்பால் அதிக உயிர் பலியைச் சந்தித்த நாடுகளில் இத்தாலியே முதலிடத்தில் இருக்கிறது. இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இன்றுவரை 18,729 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதில் பலியான ஒவ்வொரு உயிருமே விலை மதிப்பற்றது என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. ஆனால், இதுவரை 28,470 பேரைக் குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்த சாதனையை இத்தாலி மருத்துவர்கள் செய்திருக்கிறார்கள். இதில் வேதனையான விஷயம், இத்தனை பேரைக் குணப்படுத்த இரவு பகலாக உழைத்த 101 இத்தாலிய மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரைக் கரோனாவிடம் பறிகொடுத்திருக்கிறார்கள்.

இந்த மருத்துவர்களுடன் கரம் கோத்த செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் 30 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்களின் இந்த உயிரிழப்பை தங்களுக்காக ரத்தம் சிந்தி மீட்ட இயேசுவின் மரணத்துடன் ஒப்பிட்டு தங்களுக்காக மரணித்த மருத்துவர்களுக்கு துக்க அனுசரிப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இத்தாலி தனது 2 ஆயிரம் ஆண்டு வரலாற்றில் சந்தித்த எத்தனையோ முக்கிய தருணங்களில் கரோனாவின் கோரத் தாண்டவம், முக்கிய வாழ்வாதாரமான சுற்றுலாத் தொழிலை எப்போது மீட்டுக்கொடுக்கும் என்பதை இப்போதைக்கு அனுமானிக்கவே முடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x