Last Updated : 20 Aug, 2015 10:26 AM

 

Published : 20 Aug 2015 10:26 AM
Last Updated : 20 Aug 2015 10:26 AM

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 9

மார்ச் 26, 1971 என்பதுதான் வங்கதேசத்தின் அதிகாரப்பூர்வ சுதந்திர தினமாக கருதப்பட்டது. அன்று முதல் பலரும் கிழக்கு பாகிஸ் தானை வங்கதேசம் என்றே குறிப்பிடத் தொடங்கினர். வங்கதேச சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களை முக்தி பாகினி என்று அழைத்துக் கொண்டனர்.

போரைத் தொடர்ந்து வங்கதேசத்தை சேர்ந்த பலரும் அகதிகளாக இந்தியாவின் மேற்கு வங்க பகுதிக்குள் நுழைந்தனர். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இதைத் தொடர்ந்து மேற்கு பாகிஸ்தான் மீது போர் என்று அறிவித்தார். தவிர பாகிஸ்தான் விமானப் படையினர் அகதிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் இந்தியாவின் சில பகுதிகளையும் நாசமாக்கிக் கொண்டிருந்தனர்.

வங்கதேசத்தின் முக்தி பாகினி சுதந்திரப் போராட்ட வீரர்களின் வலிமை அதிகமானது. வங்கதேசம் தன்னை ஒரு சுதந்திர நாடு என்று அறிவித்துக் கொண்டவுடன் பாகிஸ் தான் ராணுவம் கடும் கோபம் கொண்டது. தங்களின் எண்ணிக் கையை அதிகரித்துக் கொள்ள பல பிஹாரி முஸ்லிம்களை ராணுவத்தில் புதிதாக சேர்த்துக் கொண்டது. ரஜாக்கர் என அழைக்கப்பட்ட இந்தப் பிரிவினரை துரோகிகள் எனக் கருதினர் வங்கதேச தரப்பினர்.

மேற்கு வங்கத்தில் இந்திய அரசின் உதவியும் கிடைத்ததால் பாகிஸ்தான் ராணுவத்தை சமாளிப்பது வங்கதேசத்துக்கு கடினமாக இல்லை. தரைப்பாதை வழியாக டாக்காவை அடைந்து பாகிஸ்தான் ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது இந்திய ராணுவம். இதை அறிந்து கொண்ட பாகிஸ்தான் டிசம்பர் 3 அன்று வானிலிருந்து தாக்குதல் நிகழ்த்தியது. இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தை முழுவதுமாகப் போரில் ஈடுபடச் செய்தார் இந்திரா காந்தி.

ஆக இந்தியா - பாகிஸ்தான் போர் 1971-ல் அதிகாரப்பூர்வமாகவே தொடங்கியது. மேற்கு வங்கம், அசாம், திரிபுரா ஆகிய மூன்று பகுதிகளிலிருந்துமே பாகிஸ்தான் ராணுவத்தைத் தாக்கியது இந்திய ராணுவம். இந்தப் பகுதிகளிலிருந்த முக்தி பாகினி படையினரும் உள்ளூர் மக்களும் இந்திய ராணுவத்துக்கு முழுவதுமாக ஒத்துழைத்தனர். பாகிஸ்தான் ராணுவம் பற்றிய பல விவரமான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. வங்கதேசத்தின் அத்தனை விமான சேவைகளும் பாகிஸ்தான் ராணுவத்தால் சீரழிக்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலி் வான்வழித் தொடர்புக்கு இந்தியா செய்த உதவி வங்கதேசத் துக்கு பேருதவியாக இருந்தது. இந்தியக் கடற்படையினரும் வங்கதேச துறைமுகங்களை வளைத்துக் கொள்ள, பாகிஸ்தான் கடற்படை தப்புவதற்கு வழியில் லாமல் போனது.

அதே சமயம் தரைப்படை யினரும் மோதிக் கொண்டனர். கெரில்லா முறையில் முக்தி பாகினி யும் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திணறியது.

டிசம்பர் 12 அன்று டாக்கா பாகிஸ்தானின் கையிலிருந்து நீங்கி மித்ரோ வாகினி வசம் வந்தது. (மித்ரோ வாகினி என்பது முக்தி பாகினியும் இந்திய ராணுவமும் கலந்த நட்பு இணக்கமாகும்.) ராணுவத் தளபதி நியாஜி தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு சரணாகதிப் பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.

இந்தப் போரில் எவ்வளவு பேர் இறந்தனர்? 26,000 பேர் என்றது பாகிஸ்தான். இந்தியாவும், வங்கதேசமும் முப்பது லட்சம் பேர் என்றனர். உண்மை இந்த இரண்டுக்கும் நடுவே எங்கோ ஒளிந்து கொண்டிருந்தது.

பாகிஸ்தான் ராணுவம் தங்கள் பகுதியைச் சேர்ந்த இரண்டு லட்சம் பெண்களை பலாத்காரம் செய்தனர் என்று அறிவித்தது வங்கதேசம். ‘‘இது அதிகமான எண்ணிக்கை’’ என்று பாகிஸ்தான் கூற, உலக அளவில் பாகிஸ்தானுக்குக் கடும் கண்டனம் எழுந்தது.

வங்கதேசத்தில் இருந்த சிறுபான்மையினரைத்தான் பாகிஸ் தான் ராணுவம் முக்கியமாகக் குறிவைத்தது. இந்து ஆண்கள் குறிவைத்துக் கொல்லப்பட் டார்கள். இந்துப் பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளானார்கள். போர் நடந்த நாட்களில் பொது இடங்களில் வங்கதேச ஆண்களின் ஆடைகளைக் களையச் சொன்னது பாகிஸ்தான் ராணுவம். சுன்னத் செய்திருந்தால் அடி உதை மட்டும். சுன்னத் செய்திருக்கவில்லை என்றால் படுகொலை.

வங்கதேசத்தில் இருந்த இந்துக்களில் பெரும்பாலான வர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து குடியேறத் தொடங்கினர்.

சுமார் ஒரு லட்சம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இவ்வளவு அதிக அளவில் ராணுவத்தினர் ஒரு நாட்டிடம் சரணடைந்தது என்பது இதுதான்.

வங்கதேசத்தை முதலில் அங்கீகரித்த நாடு பூடான். அதுவரை பாகிஸ்தானுக்குப் பலவிதங்களில் உதவி செய்து வந்த நாடு அமெரிக்கா. பாகிஸ்தானின் மேற்கு - கிழக்கு பகுதிகளில் கடும் போர் நடந்தபோது ‘‘அது உள்நாட்டு விவகாரம்’’ என்று கருத்து தெரிவித்துவிட்டு மெளனம் காத்தார் அன்றைய அமெரிக்க அதிபர் நிக்ஸன். ஒருகட்டத்தில் பாகிஸ்தானின் தோல்வி நிச்சயமானவுடன் அதற்கு உதவ முடிவெடுத்தார்.

போரை நிறுத்திக் கொள்ளாவிட்டால் இந்தியா வின்மீது அணுகுண்டுத் தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா தயங்காது என்றார். அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்றும் பாகிஸ்தானை அடைந்தது. தொடர்ந்து பாகிஸ் தானுக்கு ஆதரவான நிலையையே அமெரிக்கா எடுத்தது. போர் முடிவடைந்த பிறகுகூட இந்த விஷயத்தில் இந்தியாவின்மீது பழி சுமத்தியது. ஆனால் பல உலக நாடுகளும் வங்கதேசத்தின் ‘வேறுவழியில்லாத சுதந்திரப் பாதையை’ அங்கீகரித்ததும் அமெரிக்கா வாயை மூடிக் கொள்ள நேரிட்டது.

சோவியத் யூனியன் தொடக்கத் திலிருந்தே இந்திய ராணுவத்தை யும், முக்தி பாகினியையும் ஆதரித்தது. அமெரிக்கா இந்தியா மீது போர் தொடுத்தால், இந்தியாவுக்கு ஆதரவாக களத்தில் குதிப்போம் என்றது சோவியத் யூனியன். இந்தியாவுக்கு ஒரு போர் நீழ்மூழ்கிக் கப்பலையும் அனுப்பி வைத்தது.

ஒருகட்டத்தில் இது மற்றொரு உலகப்போருக்கு வழிவகுக்குமோ என்ற கவலை கூட எழத் தொடங்கியது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x