Published : 15 Mar 2020 07:29 AM
Last Updated : 15 Mar 2020 07:29 AM

‘கோவிட்-19’ வைரஸ் உலக நாடுகளை பாதித்த பின் 2011-ல் வெளியான ‘கண்டேஜியன்’ படம் வைரல்

கடந்த 2011-ம் ஆண்டு ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கிய கண்டேஜியன் ஹாலிவுட் திரைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.

ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கி கடந்த 2011-ம்ஆண்டு வெளியான படம் கண்டேஜியன். இந்தப் படத்தில் அறிவியல், மருத்துவம், அரசின் செயல்பாடுகள் போன்றவற்றை பரபரப்புடன் காட்சிப்படுத்தி இருப்பார் ஸ்டீவன். அப்போதே வசூலை அள்ளியது இத்திரைப்படம். படத்தில், மேட் டேமன், லாரன்ஸ் பிஷ்பர்ன், ஜூட் லா, கேத் வின்ஸ்லெட், கினெத் பால்ட்ரோ உட்பட ஏராளமான பிரபல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

படத்தில் மேட் டேமன் மனைவி கினெத் பால்ட்ரோ ஹாங்காங் சென்றுவிட்டு அமெரிக்கா திரும்புவார். ஹாங்காங் ஓட்டலில் சமையல் கலைஞர் ஒருவரிடம் கினெத் பால்ட்ரோ கைகுலுக்குவார். அங்குதான் பிரச்சினை ஆரம்பம். பழத்தை கடித்து திண்றுவிட்டு பன்றிகள் பண்ணையில் வவ்வால் எச்சத்தைப்போட்டுவிடும். அதைபன்றிகள் திண்ணும். அந்த பன்றிகளை சமைக்க சுத்தப்படுத்துவார் அந்த சமையல் கலைஞர். அப்போது கையில் படிந்த ரத்தத்தை துடைத்துவிட்டு, பால்ட்ரோவுடன் கைகுலுக்குவார். அமெரிக்கா திரும்பியவுடன் தும்மல், இருமல் என ஆரம்பித்து கடைசியில் திடீரென இறந்துவிடுவார். அதன்பின் மேட் டேமன் மகனும் இறப்பார்.

உடனடியாக மேட் டேமனை மருத்துவர்கள் தனிப் பிரிவில் சேர்த்து கண்காணிப்பார்கள். ஆனால், அவருக்கு எந்தத் தொற்றும் இருப்பதாக தெரியவில்லை. அதற்குள் பலர் அடுத்தடுத்து இறந்துவிடுகின்றனர். இதை அட்லாண்டிஸ் பகுதியில் உள்ள அமெரிக்க அரசின் நோய்தடுப்பு மைய மருத்துவர் லாரன்ஸ்பிஷ்பர்ன் அறிகிறார். ஏதோ மிகப்பெரிய பயங்கரம் வந்துவிட்டதாக அவர் உணர்கிறார். உடனே கினெத்பால்ட்ரோ இறந்த பகுதிக்கு, தன்னுடன் பணியாற்றும் மருத்துவர் கேத் வின்ஸ்லெட்டை அனுப்புகிறார். பின்னர் அவரும் பாதிக்கப்பட்டு இறக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மருந்தும் பலனளிக்கவில்லை. அதனால் தொற்றுக் கிருமி பரவுவதைத் தடுக்க விமான நிலையங்கள் மூடப்படுகின்றன. பல நகரங்கள் வெறிச்சோடி விடுகின்றன. மக்கள் பீதியில் உறைந்துவிடுகின்றனர். அதற்குள் ‘எம்இவி-1’ என்ற வைரஸ்தான் இதற்கு காரணம் என்று கண்டறிகின்றனர். இதற்கிடையில், தொற்று கிருமிக்கு தன்னிடம் மருந்து இருப்பதாக தன்னுடைய சமூக வலைதளத்தில் ஜூட் லா வதந்தியைப் பரப்புகிறார். அந்த மருந்தை வாங்க மக்கள்அலைமோதுகின்றனர். இதனால்கலவரம் ஏற்படுகிறது. உலகெங்கும் தொற்று வேகமாகப் பரவி விடுகிறது. கோடிக்கணக்கில் மக்கள் இறக்கின்றனர். விஞ்ஞானிகள் அயராமல் தீவிர ஆராய்ச்சி செய்து அந்தத் தொற்று கிருமிக்கு மருந்து கண்டுபிடிக்கிறார்கள். இதுதான் ‘கண்டேஜியன்’ படத்தின் கதைச்சுருக்கம்.

இந்தப் படம் தற்போது திடீரென வைரலாகி உள்ளது. ‘கோவிட்-19’ வைரஸ் பாதிப்பு பல நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதுபோல் ஒரு வைரஸ் பரவும் என்பதை ஏதோ முன்கூட்டியே அறிந்து எடுக்கப்பட்ட படம் போல் ‘கண்டேஜியன்’ உள்ளதே அதற்குக் காரணம்.

‘கோவிட்-19’ பாதிப்புக்குப் பிறகு, அவசர நிலையை அமெரிக்கா பிரகடனப்படுத்தி உள்ளது. இந்தச் சூழ்நிலையில், கண்டேஜியன் படத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர். உலகிலேயே அதிகமாக பார்க்கப்பட்ட படங்கள்வரிசையில் தற்போது கண்டேஜியன் படம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது என்று ‘ஐ டியூன்ஸ்’ பட்டியலிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x