

உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் சிரியா விவகாரத்தில் துருக்கி தலையிடுவதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிரிய அரசுப் படைகள் கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து அங்கு போர் உச்ச நிலையை அடைந்துள்ளது.
மக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேறி வருகின்றனர். சிரியாவின் அரசுப் படைகள் ரஷ்யப் படை உதவியுடன் இட்லிப் பகுதியிலிருந்த கிளர்ச்சியாளர்களின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றின. இதன் காரணமாக தற்போது சிரிய படைக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
ஆனால், அப்பகுதியில் தங்கள் கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ள துருக்கிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சிரியாவிலிருந்து அகதிகள் துருக்கிக்கு வருவது அதிகரிக்கும் என்ற கவலை துருக்கிக்கு வந்துள்ளது.
இதன் காரணமாக, சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி தனது ஆதரவை அளித்து வருகிறது. மேலும் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் சிரிய அரசுப் படைகள் மீது துருக்கி நடத்தும் தாக்குதலுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் , “சிரியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக துருக்கி செயல்பட்டால் அதனை ரஷ்யா தடுக்காது. துருக்கியுடனான தொடர்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன” என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறவீடாதீர்