Published : 20 Feb 2020 03:00 PM
Last Updated : 20 Feb 2020 03:00 PM

சிறப்பு வேளாண் மண்டலம்: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான சட்ட மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி, கரூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அதற்கு அடுத்த நாளே, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் எழுதிய கடிதத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரைச் சந்தித்து வழங்கினார்.

இந்நிலையில், நேற்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் வேளாண் மண்டலம் தொடர்பான விவாதத்தின்போது, விவசாயிகள் மகிழ்ச்சியளிக்கும் வகையிலான அறிவிப்பு வெளிவரும் என முதல்வர் தெரிவித்திருந்தார். அன்றைய தினமே, அனைத்துத் துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, வேளாண் மண்டல அறிவிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், இன்று (பிப்.20) சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவை முதல்வர் தாக்கல் செய்து பேசினார்.

அப்போது, இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கு தான் ஒரு விவசாயியாக மகிழ்ச்சியடைவதாகவும், இத்தருணத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நினைவுகூர்வதாகவும் தெரிவித்தார்.

இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

வேளாண் மண்டலத்திற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதற்கு 24 உறுப்பினர்களைக் கொண்ட அதிகார அமைப்பு அமைக்கப்படும். முதல்வரைத் தலைவராகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படும். துணை முதல்வர், சட்டத்துறை, வேளாண் துறை, சுற்றுச்சூழல் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, தொழில் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இக்குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவர்.

விவசாயம் சாராத தொழில்களை இனி காவிரி டெல்டாவில் மேற்கொள்ள முடியாது.

துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு ஆலை, செம்பு உருக்காலை, அலுமினியம் உருக்காலை, எண்ணெய் மற்றும் நிலக்கரிப் படுகை மீத்தேன் ஆலைகள், பாறைப் படிம எரிவாயு, ஹைட்ரோகார்பன் வாயு எடுத்தல், வாயுக்களின் ஆய்வுகள், துளைத்தெடுத்தல் மற்று பிரித்தெடுத்தல் உள்ளிட்ட ஆய்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணல்மேல்குடி, திருவரங்குளம் மற்றும் கரம்பக்குடி வட்டாரங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களை மசோதாவில் சேர்க்காதது ஏன் என, சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும், காவிரி டெல்டாவில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுள்ள விவசாயம் அல்லாத திட்டங்களுக்குத் தடை விதிக்காதது ஏன் எனக் கேள்வியெழுப்பிய ஸ்டாலின், இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை எனவும், தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் என்பதால் திருச்சியைச் சேர்க்கவில்லை எனவும் பதிலளித்தார். இதையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்புச் செய்தனர்.

இதன் பின்னர், குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சிறப்பு வேளாண் மண்டல மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தவறவிடாதீர்!

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு: ராமேசுவரம் மீனவருக்கு கண்ணில் காயம்; மதுரையில் சிகிச்சை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x