Published : 15 Feb 2020 08:15 AM
Last Updated : 15 Feb 2020 08:15 AM

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் தேவை: இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் வலியுறுத்தல்

சயீது அக்பருதீன்

நியூயார்க்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் குறித்து தொடர்கதை போல விவாதித்துக் கொண்டிருக்கக்கூடாது. சீர்திருத்தங்களை உடனடியாக அமல் செய்ய வேண்டும் என்று இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இதர 10 உறுப்பு நாடுகளின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு மட்டும் வீட்டோ அதிகாரம் உள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டாலும் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி முக்கிய தீர்மானங்களை அந்த நாடுகள் தோற்கடிக்க முடியும். எனவே, ஒருதலைப்பட்சமான வீட்டோ அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஐ.நா. சபை உறுப்பு நாடுகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து கோரி இந்தியா உள்ளிட்ட நாடுகள் நீண்ட காலமாக போராடி வருகின்றன. இந்த விவகாரத்தில் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஜி4 என்றழைக்கப்படும் இந்த நாடுகள் தரப்பில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சயீது அக்பரூதீன் ஐ.நா. சபையில் பேசியதாவது:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து தொடர் கதை போல விவாதம் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இதுவரை சீர்திருத்தங்கள் அமல் செய்யப்படவில்லை. சீர்திருத்தங்கள் தொடர்பாக ஜி4 நாடுகள் தரப்பில் ஐ.நா. சபையில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சயீது அக்பரூதீன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x