Published : 12 Feb 2020 12:20 PM
Last Updated : 12 Feb 2020 12:20 PM

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரிக்கிறோம்: ஐ.நா.வில் பாலஸ்தீன அதிபர் பேச்சு

அமெரிக்கா அதிபரின் அமைதித் திட்டத்தை நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நடந்த கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், ட்ரம்ப் வெளியிட்ட அமைதித் திட்டத்தில் பாலஸ்தீனத்தின் நிலைப்பாட்டை விளக்கினார்.

அதில் அவர் பேசும்போது, “நான் இங்கு வந்திருப்பது பாலஸ்தீனம் - இஸ்ரேல் தொடர்பான அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை பாலஸ்தீனம் நிராகரித்துவிட்டது என்பதைக் கூறுவதற்குத்தான். இந்தத் திட்டம் பாலஸ்தீனியர்களின் உரிமைகளின் நியாயத்தன்மையையும், சுயநிர்ணய உரிமையையும் ரத்து செய்கிறது. இது சட்டவிரோதமான குடியேற்றங்களை நியாயப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை விமர்சித்த மஹ்மூத் அப்பாஸ், இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

முன்னதாக, கிழக்கு ஜெருசலேமில் புதிய தலைநகருடன் கூடிய பாலஸ்தீன அரசு உருவாகும். ஆனால், ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இஸ்ரேலுக்குத் தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக ட்ரம்ப் அறிவித்தபோதே, பாலஸ்தீனம் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்துள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x