கரோனா வைரஸுக்கு சீனாவில் முதல் அமெரிக்கர் பலி: வுஹான் மருத்துவமனையில் இறந்ததாக அமெரிக்கா அறிவிப்பு

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரசுக்கு முதல் முறையாக அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார் என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

சீனாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஹூபே மாநிலத்தில் உள்ள வுஹான் நகரை மையமாக வைத்து கரோனா வைரஸ் பரவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக சீனாவை மிரட்டி வரும் இந்த வைரசுக்கு இதுவரை அந்நாட்டில் 722 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்நிலையில் வுஹான் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்கர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம் சீனாவில் முதல்முறையாக கரோனோ வைரசுக்கு வெளிநாட்டவர் ஒருவர் பலியாகியுள்ளார், அமெரிக்கர் ஒருவர் முதலாவதாக பலியாகியுள்ளார்.

இதுகுறித்து வுஹானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், " வுஹான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பிப்ரவரி 6-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வெளிநாட்டவர் மரணம் என்ற அடிப்படையில் பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் அவர்களின் நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

சீனாவில் மட்டும் இதுவரை 19 வெளிநாட்டவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் 2 பேர் முற்றிலும் குணமடைந்துவிட்டனர் என்று கூறும் சீன அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கூற மறுத்துவிட்டது

தவறவிடாதீர்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in