

இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளரா? என்று பயிற்சி செய்யும் போது கேலி பேசப்பட்ட கபில்தேவ் இன்றைய நாளான பிப்.8-ம் தேதி 432வது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றி நியூஸிலாந்தின் சர் ரிச்சர்ட் ஹேட்லி சாதனையை முறியடித்தார்.
இன்று 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் ஆக்லாந்தில் மோதி வருவதையடுத்து நியூஸிலாந்தின் உலக மகா ஸ்விங் லெஜண்ட் சர் ரிச்சர்ட் ஹேட்லியின் 431 விக்கெட்டுகள் உலக சாதனையை இந்தியாவின் கபில்தேவ் 1994ம் ஆண்டு கடந்தார்.
1994ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அகமதாபாத்தில் இலங்கை வீரர் ஹஷன் திலகரத்னேயை கபில் தேவ் வீழ்த்தினார், மஞ்சுரேக்கர் கேட்ச் பிடிக்க கபில்தேவ் சர் ரிச்சர்ட் ஹேட்லியின் சாதனையை முறியடித்தார்.
ரணதுங்கா டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். பிப்.8ம் தேதி, கபிலின் 8வது ஓவர், காலை 10.34 மணிக்கு கபில்தேவ் உலகசாதனையைச் செய்தார்.
ஷார்ட் லெக்கில் நின்று கொண்டிருந்த சஞ்சய் மஞ்சுரேக்கரிடம் கபில்தேவின் இன்ஸ்விங்கரை கையில் அடித்தார் திலகரத்னே. உடனே மைதானத்தில் 432 பலூன்கள் பறந்தன, குறைந்த ரசிகர்கள் இருந்தாலும் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர்.
அப்போதைய நேரலை ஒளிபரப்பாளரான தூர்தர்ஷன் லைவ் ரிலேயை நிறுத்தி விட்டு ‘கபில்தேவ் கா ஜவாப் நஹின்’ என்ற புகழாஞ்சலி பாடலை ஒலிபரப்பியது.
இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 17 ரன்களைல் இலங்கையை வீழ்த்தியது, இந்தத் தொடரை 3-0 என்றும் கைப்பற்றியது இந்திய அணி
இதன் பிறகு ஒரேயொரு டெஸ்ட் போட்டியை நியூஸிலாந்தின் ஹாமில்டனில் ஆடினார் கபில், மொத்தம் 434 விக்கெட்டுகளுடன் அவர் ஓய்வு பெற்றார். கபிலின் இந்தச் சாதனையை மே.இ.தீவுகளின் கார்ட்னி வால்ஷ் 2000-ம் ஆண்டு கடந்தார்.
கிரிக்கெட் மாறலாம், நாட்கள் ஓடலாம், வீரர்கள் மாறலாம் ஆனால் கபிலின் சாதனைகள் என்றும் மாறாது.
-நோபாலன்