Published : 29 Jan 2020 07:02 AM
Last Updated : 29 Jan 2020 07:02 AM

உலகையே அச்சுறுத்தும் கரோனா- சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்வு

பெய்ஜிங்

சீனாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடிய வைரஸ் சீனா மட்டுமன்றி உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது.

மத்திய சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வூஹான். அந்த நகரில் 1 கோடியே 10 லட்சம் மக்கள் வசித்தனர். கடந்த டிசம்பர் இறுதியில் அங்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அடுத்த சில வாரங்களில் வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது. நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்தது.

வைரஸ் பரவுவதைத் தடுக்க வூஹான் நகரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், வர்த்தக வளாகங்கள், தனியார் நிறுவனங்
கள் அனைத்தும் மூடப்பட்டன. ரயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப் பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. சாலைகளில் ஆம்புலன்ஸ் ராணுவ, போலீஸ் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

30 நகரங்களுக்கு சீல்

இதையும் மீறி வைரஸ் பரவியதால் வூஹான் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 29 நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. சீனாவின் இதர பகுதிகளில் இருந்து 30 நகரங்களும் துண்டிக்கப்பட்டன. மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வூஹான் சீல் வைக்கப்படுவதற்கு முன்பாக அந்த நகரை சேர்ந்த சுமார் 50 லட்சம் பேர் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டனர்.

இதன்காரணமாக வூஹானை மையம் கொண்டிருந்த கரோனா வைரஸ் தற்போது சீனா முழுவதும் வியாபித்து பரவி வருகிறது. சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. சிலஉயிரிழப்புகளும் நேரிட்டுள்ளன. பெய்ஜிங்கிலும் சிறப்பு மருத்
துவமனைகள் திறக்கப்பட்டு உள்ளன.

அந்த நாட்டில் நேற்று மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 4,515 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

112 வகை இறைச்சிக்கு தடை

பாம்பு, வவ்வால்களில் இருந்து கரோனா வைரஸ் மனிதர்களுக்கு தொற்றியிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே 112 வகையான விலங்குளின் இறைச்சி விற்பனைக்கு சீன அரசு தடை விதித்துள்ளது.

சீன சுகாதார அதிகாரிகள் கூறும்போது, "கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எச்ஐவி வைரஸுக்கான மருந்துகளை அளித்து வருகிறோம். மருந்து வகைகள், பாதுகாப்பு கவச உடைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வூஹான் நகரில் போர்க்
கால அடிப்படையில் புதிய மருத்துவமனைகளை உருவாக்கி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

ஹாங்காங், தாய்லாந்தில் தலா 8 பேர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மக்காவுவில் தலா 5 பேர், தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பானில் தலா 4 பேர், பிரான்ஸ், தைவானில் தலா 3 பேர், கனடா, வியட்நாமில் தலா 2 பேர், நேபாளம், ஜெர்மனியில் தலா ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 14 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில்கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் நூற்றுக்கணக்கானோர் தனிமைப்
படுத்தப்பட்டுள்ளனர்.

சீன அதிபர் உறுதி

அனைத்து உலக நாடுகளுக்கும் கரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகசுகாதார அமைப்பின் தலைவர், மூத்த அதிகாரிகளுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங், பெய்ஜிங்கில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அதிபர் கூறும்போது, "கரோனா வைரஸ் ஒரு பிசாசு. அந்த பிசாசு எங்கும் ஒளிந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது. வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை உலக நாடுகளுக்கு ஒளிவுமறைவின்றி தெரிவிப்போம்" என்றார்.

நோயாளிகளை தடுக்க சுவர் கட்டும் சீன கிராமங்கள்

சீனாவில் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவிவரும் நிலையில் அந்த நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். வைரஸ் பாதிப்புள்ள நகரங்களில் இருந்து பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறி வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் நோயாளிகள், பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக சீனாவின் பல்வேறு கிராமங்களில் சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன. எல்லைப் பகுதிகளில் இரவு, பகலாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஷான்ஷி மாகாணம், ஜிகாங்ஜியாங் கிராம மக்கள் கூறும்போது, "வூஹான் பகுதியில் இருந்து பலர் வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இதனால் கரோனா வைரஸ் பரவுகிறது. எங்கள் கிராமத்தைப் பாதுகாக்க அனைத்து வாயில்களிலும் சுவர் எழுப்பி அடைத்துவிட்டோம். எல்லையில் காவலர்களையும் நியமித்துள்ளோம். வைரஸ் பாதிப்பு நீங்கிய பிறகே சுவரை உடைப்போம்" என்று தெரிவித்தனர்.

வைரஸ் பாதிப்புள்ள ஹுபெய் மாகாணம் உட்பட சீனா முழுவதும் உள்ள பல்வேறு மாகாணங்களின் கிராமங்களில் வெளியாட்கள் உள்ளே நுழையாதபடி சுவர்கள், தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாம்பிலிருந்து பரவியதா?

சீனாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு அந்த நாட்டு மக்களின் உணவுப் பழக்கமும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. சீன மக்கள் அனைத்து வகையான இறைச்சி உணவுகளையும் சாப்பிடுகின்றனர். பல்லி முதல் பாம்பு வரை எதையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை.

வூஹான் பகுதி வவ்வால்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட வவ்வால்களை பாம்புகள் விழுங்கியுள்ளன. அந்த பாம்புகளை மனிதர்கள் உணவாக உட்கொண்டதால் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று சீன டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதை உறுதி செய்யும் வகையில் பாம்பு அல்லது வவ்வால் இறைச்சியில் இருந்து மனிதர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்று மெடிக்கல் வைராலஜி என்ற மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது. வூஹான் நகரில் மிகப்பெரிய மீன் சந்தை உள்ளது. இங்கு மீன்கள், பறவைகள், பாம்புகள், வவ்வால் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. அந்த சந்தையில் வாங்கப்பட்ட பாம்பில் இருந்துதான் மனிதர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே சீனாவில் 112 வகையான இறைச்சி விற்பனைக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

கண்டறிவது எப்படி?

சாதாரண காய்ச்சலை போன்றே கரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளும் உள்ளன. நோயாளிக்கு மூக்கில் நீர் வடிதல், தலைவலி, தும்மல், இருமல், தொண்டையில் வறட்சி, காய்ச்சல் ஏற்படுகிறது. ரத்த பரிசோதனை மூலம் மட்டுமே கரோனா வைரஸ் பாதிப்பை தெரிந்து கொள்ள முடியும். மும்பையை சேர்ந்த டாக்டர் லட்சுமணன் கூறும்போது, "கரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமை யான சுவாசக் கோளாறு ஏற்படும். மனித உடலின் எதிர்ப்பு சக்தி மூலம் மட்டுமே வைரஸை எதிர்கொள்ள முடியும். சத்துள்ள உணவு வகைகளை சாப்பிட வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் இருக்க வேண்டும். போதிய ஓய்வெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவுரைகளில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் பாதிப்புள்ள நோயாளிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். மூக்கு, வாயை மறைக்கும் வகையில் முகமூடி அணிந்து கொள்வது நல்லது. கைகளை அவ்வப்போது சோப்பு போட்டு கழுவ வேண்டும். கழுவாத கைகளால் கண், மூக்கு, வாயைத் தொடக்கூடாது. இறைச்சி, முட்டையை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்ணக்கூடாது. இறைச்சி கடைகளுக்கு சென்று வந்தவர்கள் கை, கால்களை நன்றாக கழுவ வேண்டும்.

வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தனிமையாக இருப்பது நல்லது. பொது இடங்களுக்கு கண்டிப்பாக செல்லக்கூடாது.

இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆய்வுக் கூடத்திலிருந்து வைரஸ் வெளியேறியதா?

சீனாவின் வூஹான் நகரில் வைரஸ் கிருமிகளின் ஆய்வுக் கூடம் உள்ளது. அங்கு சீன விஞ்ஞானிகள் புதிய வகை வைரஸ் கிருமிகளை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. எதிரி நாடுகளுடன் போர் மூண்டால் இந்த வைரஸ் கிருமிகளை ஆயுதமாகப் பயன்படுத்த சீன ராணுவம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அங்கு உருவாக்கப்பட்ட வைரஸ் கிருமிதான் ஆய்வுக் கூடத்திலிருந்து வெளியேறி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது என்று இஸ்ரேல் ராணுவத்தின் முன்னாள் உளவுத் துறை அதிகாரி டேனி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

வைரஸின் வரலாறு

கடந்த 1960-ம் ஆண்டில் விலங்குகள், பறவைகள், கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லத்தீன் மொழியிலிருந்து கரோனா (கிரீடம்) என்று இந்த வைரஸுக்கு பெயர் சூட்டப்பட்டது. அதாவது நுண்ணோக்கி மூலம் வைரஸை உற்று நோக்கினால் கிரீடம் போல தெரிவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.

இதன்பின் கடந்த 2012-ம் ஆண்டில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் முதல்முறையாக மனிதர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. கரோனா வைரஸ் குடும்பத்தில் ஏற்கெனவே 6 வகையான வைரஸ்கள் உள்ளன. தற்போது சீனாவில் பரவி வருவது 7-வது வகை வைரஸ். இதற்கு 'நாவல் கரோனா வைரஸ்' (2019-என்சிஓவி) என்று பெயரிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x