கரோனா வைரஸின் புகைப்படம் வெளியீடு: சீனாவில் பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு  

படம் உதவி: CGTN
படம் உதவி: CGTN
Updated on
1 min read

சீனாவின் தேசிய நுண்ணறிவியல் மையத்தில் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பில் கரோனா வைரஸின் புகைப்படம் முதன்முதலாக வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

தற்போது, கரோனா வைரஸ் சீனாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை இவ்வரைஸுக்கு சீனாவில் 25 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 835 பேருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவின் தேசிய நுண்ணறிவியல் மையம், கரோனா வைரஸின் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனா முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, முதற்கட்ட நடவடிக்கையாக, வூஹான் மற்றும் வுஹாங்காங் நகரங்களில் ரயில், பேருந்து மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தாக்குதலால் சுவாசக் கோளாறு, அதிகப்படியான காய்ச்சல் ஆகியவை ஏற்படுகின்றன. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் இவ்வைரஸ் பரவும் தன்மை கொண்டது.

சீனா மட்டுமல்லாமல் தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இவ்வைரஸ் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in