Published : 12 Jan 2020 12:28 PM
Last Updated : 12 Jan 2020 12:28 PM

ஈரான் இஸ்லாமிய புரட்சிப் படை தளபதி சுலைமானியைக் கொன்றது ஏன்? - அதிபர் ட்ரம்ப் விளக்கம்

ஈரான் படைத்தளபதியை அமெரிக்கா ஈராக்கில் வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றது. இதனையடுத்து ஈரான் அமெரிக்க நிலைகள் மீது இராக்கில் தாக்குதல் நடத்த போர்ப்பதற்றம் உருவாகியுள்ளது.

மேலும் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைன் விமானம் இலக்காக 176 பயணிகள் பலியானதும் சர்வதேச நாடுகளின் கண்டனங்க்களை ஈரான் பக்கம் திருப்பியுள்ளது, இந்நிலையில் ஈரானின் செயலைக் கண்டித்து டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் பிரிட்டன் தூதரைக் கைது செய்து பிரிட்டனின் கோபத்தையும் ஈரான் கிளறியுள்ளது.

இந்நிலையில் சுலைமானி கொலைக்கு காரணம் என்ன என்பதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கியுள்ளார், அவர் கூறிய போது,

“சுலைமானி கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த தாக்குதலை ஈரான்தான் நடத்தியது.

அந்த தாக்குதலுக்கான ஏற்பாடுகளை செய்தது யார் என்பது உங்களுக்கு தெரியும். அவர் தற்போது உயிரோடு இல்லை. அவர் பாக்தாத் தூதரகத்தை மட்டும் குறிவைக்கவில்லை.

இது தவிர மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் 3 அமெரிக்க தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்துவதற்கு அவர் சதி திட்டம் தீட்டியிருந்தார். இதுபற்றிய உளவு தகவல்கள் கிடைத்த பிறகு அவரை கொலை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தேன்.” என்று கூறினார்.

இதற்கிடையே, ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்காக ஈரான் மீது அமெரிக்க புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

ஈரானிய ஆட்சியின் உலகளாவிய பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்த இந்த பொருளாதார தடைகள் அறிவிக்கப்படுவதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவ் முனுச்சின் கூறினார்.

இந்த தடைகள் ஈரானின் கட்டுமானம், உற்பத்தி மற்றும் சுரங்க தொழில்களை பாதிக்கும் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x