Last Updated : 08 Jan, 2020 11:36 AM

 

Published : 08 Jan 2020 11:36 AM
Last Updated : 08 Jan 2020 11:36 AM

உலக நாடுகள் உற்றுநோக்கும் சுலைமான் கொலை: ஈரானின் பதில் தாக்குதல் எப்படி இருக்கும்? அமெரிக்காவுக்கு எப்படிப் பதிலடி கொடுக்கப் போகிறது?

“ஏற்கனவே எங்க திட்டத்தை தொடங்கிவிட்டோம். சுலைமானையும் மற்ற தியாகிகளையும் கொலை செய்து கைகளில் ரத்தக்கறை படியவைத்துக்கொண்ட கிரிமினல்களுக்கு மறக்கமுடியாத வகையில் பழிவாங்கல் இருக்கும்”

இது ஈரானின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவர் கொமேனி அழுகையோடும், ஆதங்கத்தோடும், மனதில் ஆறாத வடுவோடும் பேசிய வார்த்தைகள்.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உரசல், மோதல் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டது அல்ல. கடந்த 67 ஆண்டுகளாக அணைக்க முடியாமல் எரிந்துகொண்டிருக்கும் பகை.

கடந்த 1953-ம் ஆண்டில் முகமது முசாடக்கை அமெரிக்கா ஆட்சியைவிட்டு அகற்றியபோது பற்றிக்கொண்ட பகை நெருப்பு, 1979-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு ஷாவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு இஸ்லாமிய குடியரசாக ஈரான் அறிவித்தது. அப்போது கொளுந்துவிடத் தொடங்கிய பகை இன்று வரை பற்ற எரிகிறது.

இதுவரை ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் மறைமுக பனிப்போராக இருந்த நிலையில் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதல் மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தவாரம் பாக்தாத் விமானநிலையத்தில் வந்திறங்கிய ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப்படையின் தளபதி காசிம் சுலைமானையும், அவரின் மருமகன் முகந்திஸ் உள்ளிட்ட 8 பேரை அமெரிக்க ஆளில்லா விமானம் ஏவுகணை தாக்குதல் நடத்தி படுகொலை நிகழ்த்தியது. இந்த கொலைக்கு ஒற்றை வரியில் விளக்கம் அளித்த அமெரிக்காவின் அகங்காரம்தான் ஈரானின் கோபத்தையும், பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.

இராக்கில் தங்களது முக்கிய படைத் தலைவா் காசிம் சுலைமானியை படுகொலை செய்த அமெரிக்காவைப் பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் கர்ஜித்துள்ளது. அமெரிக்கா செய்த அவசரத்தனத்தால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரிக்கும் என்று ரஷியா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் எச்சரித்துள்ளன.

இஸ்ரேலுக்கு “மொசாட்” படை எப்படியோ அதுபோலத்தான் ஈரானுக்கு “குட்ஸ்” படையாகும். வெளிநாடுகளில் தங்களுக்கு ராணுவ ரீதியில் வலுவான நிலையை ஏற்படுத்தக் கடந்த 1990களில் உருவாக்கப்பட்டதுதான் இஸ்லாமிய புரட்சி ராணுவத்தின் வெளிநாட்டுப் பிரிவான “குட்ஸ் படை”.
இதன் தலைவரும், ஈரானின் 2-வது அதிகாரப்பதவியில் இருந்த காசிம் சுலைமானை அமெரிக்கா படுகொலைததற்கு அந்நாட்டை ஈரான் எப்படிப் பதிலடி கொடுக்கப் போகிறது என்பதுதான் உலகமே எதிர்பார்க்கும் கேள்வியாகும்.

அமெரிக்காவுக்கு ஈரான் கொடுக்கப்போகும் அடி, அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு மட்டுமல்ல உலகப் பொருளாதாரத்தையே உலுக்கும் என்பதால், சர்வதே சமூகமே ஈரானின் நடவடிக்கையை உற்று நோக்கி வருகிறது

ஈரானைப் பொறுத்தவரை அந்த நாடு எதையும் நடைமுறைக்குச் சாத்தியமில்லாதவற்றைச் செயல்படுத்தாத நாடாகும். அமெரிக்க ராணுவத்தின் படைவலிமை, ஆயுதங்கள், போர் கருவிகள், விமானம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்குதான் ஈரானிடம் இருக்கிறது.

ஆதலால், அமெரிக்காவுடன் நேரடியாகப் போரிட்டு வெல்வதோ அல்லது படைக்குச் சேதாரத்தை ஏற்படுத்துவதோ எந்தவிதத்திலும் ஈரான் ஈடுபடாது. அது ஈரானுக்குத்தான் பெரும் பின்னடைவைக் கொண்டு சேர்க்கும் என்பதை ஈரான் நன்கு அறியும்.

அமெரிக்காவின் படைகளோடு ஒப்பிடும்போது ஈரான் கொசுறுதான் என்றாலும், அந்நாடு கடந்த காலங்களில் கொடுத்த பதிலடியைக் குறைத்து மதிப்பிட முடியாது. யானையி்ன் காதுக்குள் சென்ற எறும்பு அளிக்கும் சித்திரவதைபோல் ஈரானால் அளிக்க முடியும்.

அப்படியென்றால், ஈரானின் பதிலடி எப்படி இருக்கும், எங்கிருந்து தொடங்கும் என்பதுதான் கேள்வி. நிச்சயம் ஈரான் முன்னெடுக்கும் மூன்றாவது உலகப் போர் அணு ஆயுதங்களால் இருக்கப் போவதில்லை…அது "சைபர் அட்டாக்"காகத்தான் இருக்கும் உலக வரலாற்று நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.

படுகொலை செய்யப்பட்ட சுலைமான் வழிநடத்திய குட்ஸ் படையில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த சைபஅட்டாக் டீம் இருப்பது அமெரிக்காவுக்கே தெரியும் அந்த படையி்ன் மூலம் தாக்குதல் நத்தப்படலாம். இந்த ஈரானின் "சைபர் அட்டாக்" படைப்பிரிவு ஏற்கெனவே பலமுறை தாங்கள் யாரென்பதை அமெரிக்காவுக்கு உணர்த்தியுள்ளது. சில உதாரணங்களைக் குறிப்பிட்டால் புரிந்துவிடும்

கடந்த 2012-ம் ஆண்டு அமெரிக்கா ஈரான் மீது தடைவிதித்தபின், வால்ஸ்டீர்ட் பேங்க்கின் சேவையை ஈரான் சைபர் டீம் முற்றிலும் ஹேக் செய்து முடக்கி ஸ்தம்பிக்க வைத்து, கோடிக்கணக்கான டாலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க வங்கிகள் சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
2015-ம் ஆண்டு துருக்கியின் எல்க்ட்ரிக் கிரிட்டில் சைபர்அட்டாக் நடத்தி ஈரான் துருக்கியை அலறவிட்டது. ஏறக்குறைய 4 கோடி மக்கள் மின்இணைப்பு இல்லாமல் இருளில் மூழ்கடித்தது ஈரான்.

2017-ம் ஆண்டு பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மின்அஞ்சல்களை ஹேக் செய்தது, அதன்பின் நடந்த பேச்சில் சமாதானமானது. சமீபத்தில் அமெரிக்காவின் அரசு ஒப்பந்ததாரர்களின் புள்ளிவிவரங்களை ஹேக் செய்து அமெரிக்காவை ஈரான் ராணுவம் அதிர்ச்சியடைச் செய்தது. இதுபோன்று குறிப்பிடத்தகுந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஈரான் எந்தவகையான தாக்குதல்களைக் கையில் எடுக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே மோப்பம் பிடித்த அமெரிக்க உள்துறை அமைத்து தரவுகளையும் பத்திரப்படுத்த எச்சரித்துள்ளது. இதற்கான உத்தரவை அமெரிக்க சிஎஸ்ஐஏ இயக்குநர் கிறிஸ் கெர்ப்ஸ் வெளியிட்டுவிட்டார்.

பாஸ்டன் நகரில் இயங்கும் சைபர்ரீஸன் எனும் கணினி பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் சாம் குர்ரே கூறுகையில், “ இஸ்ரேலைப் போல் அல்லாமல் ஈரானின் சைபர் தாக்குதல் எந்த வடிவத்தில், எந்த அளவில் வரும் என்பதைக் கணிக்க முடியாது. எந்தவடிவத்திலும், எங்கிருந்தும் வரக்கூடும் என்பதால் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்கா,இஸ்ரேல் உருவாக்கிய ஸ்டக்ஸ்நெட் தாக்குதலுக்குப்பின் ஈரான் வலிமையான சைபர்படைப் பிரிவை உருவாக்கிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.ஆதலால் அமெரிக்கா மீது சைபர் தாக்குதலை ஈரான் நடத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

போா் பதற்றங்களின்போது, அதன் சாதக பாதகங்களை நன்கு ஆராய்ந்து, மிகுந்த சாதுரியமாக எதிர்வினையாற்றும் திறன் ஈரானுக்கு இருக்கிறது என்பதைப் பலமுறை நிரூபித்துள்ளது. அதனால்தான் இதுவரை சிரியாவிலும், இஸ்ரேலிலும் நேரடியாக களமிறங்காமல் காரியம் சாதித்து வருகிறது.

அடுத்ததாக, ஈரான் நேரடியாக அமெரிக்காவுடன் மோதாமல் அமெரிக்காவின் தூதரகங்கள் உலக நாடுகளில் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் மறைமுகமாகத் தாக்குதல் நடத்தலாம். வளைகுடாவில் இருக்கும் அமெரிக்கா தாதரககங்களை ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களை தூண்டிவிட்டுத் தாக்குதல் நடத்தி குடைச்சலை ஈரான் கொடுக்கும்

அடுத்ததாக அமெரிக்காவை எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு ஈரான் அடிக்கலாம். அதாவது, வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் ஆதரவாளராக இருக்கும் சவுதி அரேபியா மீது தனது ஆதரவாளர்களா ஹவூத்தி கிளர்ச்சியாளர்களைத் தூண்டிவிட்டுத் தாக்குதல் நடத்தவிட்டு அமைதியற்ற சூழலை உண்டாக்கலாம்

இப்போதைக்கு ஈரான் அமைதி உலக நாடுகளுக்கு பெரும் பீதியையும், பதற்றத்தையும்தான் நாளுக்குநாள் அதிகரிக்க வைக்கிறது. எந்த நேரத்தில் எந்த மாதிரியான தாக்குதல் நடக்குமோ என்று வரலாற்று நிபுணர்கள் அஞ்சுகிறார்கள். தனக்குரிய நேரம் வரும்வரை காத்திருந்து வஞ்சம் தீர்ப்பதில் ஈரானியா்கள் கைதேர்ந்தவர்கள். ஈரான் அளிக்கும் அதிர்ச்சியை அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு ஏற்படப்போகும் அதிர்வும் உலகளவில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x