Published : 07 Jan 2020 11:46 AM
Last Updated : 07 Jan 2020 11:46 AM

அமெரிக்க தாக்குதலில் இறந்த ராணுவ தளபதியின் உடல் இன்று அடக்கம்: ஈரான் முதன்மை தலைவர் கண்ணீர் அஞ்சலி

அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் இறந்த ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உள்ளிட்டோருக்கு தலைநகர் தெஹ்ரானில் நேற்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஈரான் முதன்மை தலைவர் அலி காமனேய் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார்.

இராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரம் முன் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த போராட்டத்தில் தூதரக அலுவலகம் சூறையாடப்பட்டது. இதற்கு பதிலடியாக பாக்தாத் விமான நிலையம் அருகில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி, துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹ்தி அல் முஹாந்திஸ் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அமெரிக்கா –ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் சுலைமான் உள்ளிட்டோரின் உடல்கள் நேற்று தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஈரான் முதன்மை தலைவர் அலி காமனேய், அதிபர் ஹசன் ருஹானி, நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி, நீதித்துறை தலைவர் சையது இப்ராஹிம் ரெய்ஸி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடந்த பிரார்த்தனையில் முதன்மை தலைவர் அலி காமனேய் கண்ணீர் விட்டு அழுதார்.

இறுதி அஞ்சலியை தொடர்ந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கி தெஹ்ரான் சாலைகள் வழியாக இறுதி ஊர்வலம் புறப்பட்டது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஈரான் தளபதி காசிம் சுலைமானியை கவுரவிக்கும் வகையில் அந்நாட்டில் 3 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டது. அவரது உடல் தெற்கு ஈரானில் உள்ள சொந்த ஊரான கெர்மான் நகரில் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x