Published : 23 Dec 2019 03:49 PM
Last Updated : 23 Dec 2019 03:49 PM

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கு; 5 பேருக்கு தூக்கு தண்டனை

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சவுதி அரசு வழக்கறிஞர் கூறும்போது, ''சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடையவர்களில் 5 பேருக்கும் தூக்கு தண்டனையும், 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

ஜமால் கொலை வழக்கின் தீர்ப்பு தொடர்பான முழுமையான விவரம் இதுவரை வெளிவரவில்லை.

ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபிக் மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.

மேலும், ஜமால் கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகவும் கூறியது. ஜமால் கொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் ஜமாலின் மரணத்தில் சவுதி இளவரசருக்குப் பங்கு இருக்கிறது என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஜமால் மரணத்துக்கு சவுதி தலைவர் என்ற பொறுப்பில் நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். ஆனால் ஜமால் கொலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன் என்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பதில் அளித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x