Last Updated : 21 Dec, 2019 01:20 PM

 

Published : 21 Dec 2019 01:20 PM
Last Updated : 21 Dec 2019 01:20 PM

கூகுள் சிஇஓ தமிழர் சுந்தர் பிச்சைக்கு 2020ம் ஆண்டில் கோடிக் கணக்கான மதிப்புள்ள பங்குகள், ஊதியம்: புதிய பதவிக்கு பரிசு

கூகுள், அல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை: கோப்புப்படம்

சான்பிரான்சிஸ்கோ

கூகுள் நிறுவனம் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கும் தமிழரான சுந்தர் பிச்சை 2020ம் ஆண்டில் ரூ.14கோடிக்கும் அதிகமாக ஊதியமும், ரூ.1,707 கோடி மதிப்புள்ள பங்குகளும் அவருக்குக் கிடைக்க உள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது

சான்பிரான்ஸ்சிஸ்கோ பங்குச்சந்தை ஆணையத்தில் அல்பாபெட் நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில் 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை ஆண்டுக்கு ரூ.14 கோடி(20லட்சம் டாலர்) ஊதியம் பெறுகிறார் என்று தகவல் தெரிவித்துள்ளது என மெர்குரி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வரும் சுந்தர் பிச்சை ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்த மாதத்தில் நியமிக்கப்பட்டார். சுந்தர் பிச்சை நியமனத்தை அங்கீகரிக்கும் வகையிலும், கவுரவப்படுத்தும் வகையிலும் அவருக்கு அவருக்குப் பங்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சுந்தர் பிச்சை கடந்த வியாழக்கிழமை 9 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகள்,(ரூ.640கோடி) ஆல்ஃபபெட் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர கூகுள் நிறுவனத்துக்குத் தொடர்ந்து பணியாற்றுவதை அங்கீகரித்து தனியாக 12 கோடி டாலரும்(ரூ.850கோடி), 3 கோடி டாலரும்(ரூ.213 கோடி) 2022-ம் ஆண்டுக்குள் வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களான லாரி பேஜ், செர்ஜி பிரின் ஆகியோர் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்து, சுந்தர் பிச்சையை ஆல்ஃபபெட் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக நியமித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் லாரி பேஜ் மற்றும் பிரின் ஆகியோர் இருவரும் கூகுள், ஆல்ஃபபெட் நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பிலும், இயக்குநர்கள் பொறுப்பிலும் இருப்பார்கள், அவர்களுக்குரிய பங்குகளும் தொடர்ந்து இருக்கும்.

தமிழகத்தின் சென்னையில் பிறந்து வளர்ந்து, ஐஐடியில் படித்தவரான சுந்தர் பிச்சை, தனது முதுநிலை பட்டப்படிப்பை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலும், எம்.பி.ஏ.படிப்பை வார்டன் ஸ்கூலிலும் பயின்றார்.

கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் பல்வேறு டூல்பார்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டார், குறிப்பாகக் கூகுள் க்ரோம் செயலியை உருவாக்கி, மேம்படுத்தி, உலக அளவில் பிரபலமடையச் செய்தார் சுந்தர் பிச்சை

கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார், 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் கூகுள் தலைமை நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக சுந்தர் பிச்சை உயர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x