Published : 19 Dec 2019 08:59 AM
Last Updated : 19 Dec 2019 08:59 AM

டொனால்டு ட்ரம்ப் பதவி இழப்பாரா...?

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதற்கிடையில் ஜனநாயகக் கட்சியினரின் கவனம் திசை திரும்பிவிட்டது. அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கையால் அவர்களுக்கு தோல்விதான் கிடைக்கப் போகிறது. தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார், அரசு நிர்வாகத்தில் தலையிட்டார் என்ற குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் மீது வைத்துள்ளனர்.

பிரதிநிதிகள் சபையில் இந்த புகார் விரைவில் ஓட்டெடுப்புக்கு வரப் போகிறது. இங்கு ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி கிடைக்கும். ஆனால் அது நிலைக்காது. அடுத்ததாக, இந்த தீர்மானம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான செனட் சபைக்கு கொண்டு செல்லப்படும்.

அங்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால்தான் தீர்மானம் வெற்றி பெறும். அதற்கு 67 ஓட்டுகள் தேவைப்படும். ஆனால் கட்சி ரீதியாகத்தான் உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்பதால் கண்டிப்பாக ட்ரம்ப் அங்கு வெற்றி பெறுவார். குற்றமற்றவர் என அறிவிக்கப்படுவார். ட்ரம்பை பதவியில் இருந்து நீக்கிவிடலாம் என்ற ஜனநாயகக் கட்சியினரின் கனவு பலிக்காது.

ஆனால் உண்மையிலேயே ஜனநாயகக் கட்சியின் பிரச்சினையே அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள்தான். மொத்தம் 25 வேட்பாளர்களில் இப்போது 15 அல்லது 16 பேர் களத்தில் இருக்கிறார்கள். இறுதியில் செனட்டர்கள் பெர்னி சாண்டர்ஸும் எலிஸபெத் வாரனும் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் துணை அதிபரும் முன்னாள் செனட்டருமான ஜோஸப் பிடென், ட்ரம்ப் பதவி நீக்க நடவடிக்கையில் சாட்சி சொல்ல வேண்டியிருந்தால், பிரச்சாரத்துக்கு செல்ல முடியாமல் வாஷிங்டனில்தான் பெரும்பாலான நேரத்தைக் கழிக்க வேண்டியிருக்கும். குடியரசுக் கட்சியினர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க நடவடிக்கையை பழி வாங்கும் செயலாகக் கூறி ஏற்கெனவே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். பதவி நீக்க நடவடிக்கை தோல்வியடையும் பட்சத்தில் அதை தங்களுக்கு சாதகமாக ஆக்கி விடுவார்கள்.

அமெரிக்காவில் பதவி நீக்க நடவடிக்கையை சந்திக்கும் மூன்றாவது அதிபர் ட்ரம்ப். குடியரசுக் கட்சியின் ரிச்சர்டு நிக்ஸன், செனட்டில் தனக்கு போதுமான ஆதரவில்லை எனத் தெரிந்ததும் அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். கடந்த 1868-ல் பிரதிநிதிகள் சபையில் ஆண்ட்ரூ ஜான்சன் மீதான பதவி நீக்க தீர்மானம் வெற்றியடைந்தது.

ஆனால், ஒரே ஒரு ஓட்டில் செனட் சபையில் தீர்மானம் தோல்வி அடைந்ததால் அவர் பதவி தப்பியது. 1998-ல் அதிபராக இருந்த பில் கிளிண்டன் மீதான பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் வெற்றி பெற்று, செனட் சபையில் தோல்வி அடைந்தது. அதனால் அவரையும் சட்ட ரீதியாகப் பதவியில் இருந்து நீக்க முடியவில்லை. ட்ரம்ப் விஷயத்திலும் அதுதான் நடக்கும். ஆக மொத்தம், அமெரிக்க வரலாற்றில் பதவி நீக்க நடவடிக்கை மூலம் எந்த அதிபரையும் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் கடந்த கால உண்மை.

2020 அதிபர் தேர்தலைப் பொருத்தவரை, ட்ரம்ப் மீதான பதவி நீக்க நடவடிக்கையால், ஜனநாயகக் கட்சியினரின் கவனம் அனைத்தும் தேவையில்லாமல் திசை மாறியிருக்கிறது. கட்சியின் இந்த முடிவை பலரும் எதிர்த்து உள்ளனர். பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்ஸி பெலோசி, பதவி நீக்க நடவடிக்கை என்பது தேர்தல் தொடர்பானதல்ல. இது அரசியல் சட்டம் தொடர்பானது எனக் கூறியிருக்கிறார்.

ஆனால், பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், ட்ரம்ப் தப்பு செய்திருப்பார் என்று மக்கள் நம்புவதாகவும் அதற்காக அவரை பதவியில் இருந்து நீக்குவது தவறு என்றும்தான் கூறியுள்ளனர். பில் கிளிண்டன் பதவி நீக்க நடவடிக்கையை அடுத்து ஏற்பட்ட விவாதங்கள், உணர்ச்சி மோதல்களால் ஏற்பட்ட காயம் ஆற பல ஆண்டுகள் ஆனது. அதற்கான விலையை 2000, 2004-ம் ஆண்டுகளில் நடந்த அதிபர் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியினர் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ட்ரம்ப் பதவி நீக்க நடவடிக்கை, தேர்தல் ரீதியாக தங்கள் வெற்றியைப் பாதிக்கும் என ஜனநாயகக் கட்சியினரிடையே அச்சம் எழுந்துள்ளது. மக்கள், ஊடகங்களின் கவனம் அனைத்தும் பதவி நீக்க நடவடிக்கையின் பக்கமே இருக்கும். இதனால் பல லட்சம் டாலர் செலவில் செய்யப்படும் ஜனநாயகக் கட்சியினரின் பிரச்சாரம் எடுபடாமல் போக வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அதிபர் வேட்பாளரை முதலில் தேர்வு செய்யும் அயோவா காக்கஸ், ஹாம்ப்ஷையர் பிரைமரி தேர்தல் கூட, அதிபர் பதவி நீக்க கூச்சல், குழப்பத்தில் யாருக்கும் தெரியாமலேயே போய் விடுமோ என்ற நிலைதான் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x