Published : 27 Nov 2019 06:14 PM
Last Updated : 27 Nov 2019 06:14 PM

அல்பேனியா நிலநடுக்கம்: மீட்புப் பணியில் பயிற்சி நாய்கள்

அல்பேனியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த பத்து வருடங்களில் ஏற்படாத பாதிப்பை அங்கு ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க பயிற்சி நாய்கள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அல்பேனியா தலைநகர் திரானாவிலிருந்து சுமார் 18 மைல்கள் தூரம் உள்ள ஷிஜக் நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் அல்பேனியாவில் மோசமான அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்துக்கு 600க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும், 20 பேரைக் காணவில்லை என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கு பயிற்சி நாய்கள் மற்றும் ட்ரோன்களை மீட்புப் படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

மீட்புப் பணி வீரர் ஒருவர் கூறும்போது, ''நிலநடுக்கத்தால் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம். மீட்கப்படுகிறவர்களில் எல்லோரும் உயிருடன் இருக்கிறார்களா என்று எங்களுக்குத் தெரியவில்லை'' என்றார்.

நிலநடுக்கப் பாதிப்பு காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டுத் தரப்படும் என்று அல்பேனியா பிரதமர் எதி ராமா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x