Last Updated : 27 Aug, 2015 10:43 AM

 

Published : 27 Aug 2015 10:43 AM
Last Updated : 27 Aug 2015 10:43 AM

1984-ல் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை: சோனியாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்க நீதிமன்றம்

1984-ம் ஆண்டு இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, அமெரிக்க மேல்முறை யீடுகளுக்கான நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாது காவலர்கள் சுட்டுக் கொன்றனர். அந்த பாதுகாவலர்கள் சீக்கியர்கள் என்பதால் நாடு முழுவதும் சீக்கியர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. முக்கிய மாக தலைநகர் டெல்லியில் சீக்கியர்கள் பலர் கொல்லப் பட்டனர். நாடு முழுவதும் நடை பெற்ற வன்முறையில் 3,325 சீக்கியர்கள் பலியாயினர். ஆயிரக் கணக்கானோர் காயமடைந்தனர். சீக்கியர்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள் சொத்துகள் தீவைத்து கொளுத் தப்பட்டன. பல இடங்களில் அவர்களது சொத்துகள் கொள்ளை யடிக்கப்பட்டன. சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் சம்பவம் நடந்து சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதில் பாதிக்கப்பட்டு இப்போது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இரண்டு நபர்கள் மற்றும் 'சீக்கியர் களுக்கான நீதி' (எஸ்எஃப்ஜே) என்ற மனித உரிமை அமைப்பினர் அமெரிக்காவின் நியூயார்க் புரூக்ளின் நீதிமன்றத்தில் சோனியா காந்தி மீது கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

அதில் கலவரத்தில் தொடர்பு டைய கட்சித் தலைவர்களை தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள சோனியா காந்தி பாதுகாக்கிறார். கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி பிரெய்ன் கோகன், மனுவை தள்ளுபடி செய்தார். அப்போது இந்த வழக்கு அமெரிக்க சட்ட வரம்புக்குள் வராததால் அதனை தள்ளுபடி செய்வதாக நீதிபதி குறிப்பிட்டார்.

இதையடுத்து, மேல் முறையீடுகளுக்கான அமெரிக்க நீதிமன்றத்தில் சீக்கியர் அமைப்பு மேல்முறையீடு செய்தது. இதில் சோனியாவுக்கு எதிரான மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தீர்ப்பை நீதிபதிகள் உறுதி செய்தனர். வழக்கு விசார ணைக்கு தகுதியுடையது அல்ல எனக் கூறி, மனுவை நிராகரித்தனர். வழக்கில் தொடர்புடைய அனைத்துமே அமெரிக்காவுக்கு வெளியே நடந்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

சோனியா தரப்பில், இந்திய வம்சாவளி அமெரிக்க வழக்கறிஞர் ரவி பத்ரா வாதாடினார்.

அவர் கூறும்போது, ‘‘நீதிபதிகளின் இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. சோனியாவை தவறுகளற்றவர் எனக் கூறியிருப் பதன் மூலம் தேசத்தின் இறை யாண்மையைக் காத்துள்ளனர்” என்றார்.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவ தாக ‘சீக்கியர்களுக்கான நீதி’ அமைப்பின் ஆலோசகர் குர்பத்வந்த சிங் பன்னம் செய்தி யாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சீக்கியர்களுக்கு உரிய நீதி கிடைக்க உதவ வேண்டு மென்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் சீக்கிய அமைப்பினர் கடிதம் எழுதினர்.

சீக்கியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை யால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக பத்திரிகைகள் மற்றும் டி.வி.யில் வெளியான செய்திகள், வீடியோக்கள், இந்த வன்முறை யால் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான புள்ளிவிவரங்களையும் ஒரு தொகுப்பாக தயாரித்து அதனை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனிடமும் அந்த அமைப்பினர் வழங்கினர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x