Published : 22 Jul 2015 10:18 AM
Last Updated : 22 Jul 2015 10:18 AM

உலக மசாலா: சவப்பெட்டி..விற்பனைக்கு!

சவப்பெட்டி விற்பனை தொழிலைச் செய்து வருகிறார் ஜெர்மனைச் சேர்ந்த ரேச்சல் மெர்க்ஸ் என்ற பெண். மனிதனின் இறுதி வழியனுப்பும் நிகழ்ச்சியைப் பிரமாதமாகச் செய்து கொடுக்கும் பணி அவ்வளவு உற்சாகம் தராது. இந்தத் தொழில் செய்து வருபவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில், ஆன்லைனில் பெண்களுக்காக ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் கலந்துகொண்டு, ஏராளமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் 36 வயது ரேச்சல். ‘மிஸ் ஃபேர்வெல்’ என்ற பட்டம் சூட்டப்பட்டிருக்கிறது. ‘‘46 பேரிலிருந்து நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. அழகு என்பது நம் குணத்திலும் நம் முதிர்ச்சியான கருத்துகளிலும்தான் இருக்கிறதாக நான் நம்புகிறேன்’’ என்கிறார் ரேச்சல்.

நீங்க சொல்வது உண்மைதான் ரேச்சல்!

சான்பிரான்சிஸ்கோவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஏற்படும் எந்த விதத் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கும் மக்கள் ஜோய் டாலியைத்தான் அழைக்கிறார்கள். அழைப்பு மணியில் இருந்து கம்ப்யூட்டர் வைரஸ் வரை அனைத்து விஷயங்களையும் சரி செய்துவிடுகிறார் ஜோய். இவர் தொழில்நுட்ப வல்லுனர் அல்ல. மந்திரவாதி. ‘‘இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பொருள் வேலை செய்யவில்லை என்றால், அது கெட்ட ஆவிகளின் வேலைதான். கெட்ட ஆவிகளைத் துரத்தி, மீண்டும் இயங்க வைக்கும் பணியைத்தான் நான் செய்து வருகிறேன்’’ என்கிறார் ஜோய்.

ஒரு நிறுவனத்தில் கருவி பழுதாகிவிட்டது. தொழில் நுட்ப வல்லுனர்கள் வந்து பார்த்தும் பழுது நீங்கவில்லை. யாரோ ஒருவர் ஜோயை அழைத்து வந்தார். எல்லோரும் ஏளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஏதேதோ மந்திரங்கள் சொன்னார். சிறிது நேரத்தில் அந்த இயந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. அதுவரை நம்பாதவர்கள் கூட ஜோயை நம்ப ஆரம்பித்து விட்டனர். கம்ப்யூட்டர் வைரஸ், ஹேக்கர்ஸ் பிரச்சினைகளைக்கூட தீர்த்துவிடுகிறார் தொழில்நுட்பம் அறியாத ஜோய் என்கிறார்கள். இந்த நவீன காலத்தில் இவற்றை எல்லாம் நம்புகிறார்களே என்று கவலைப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் ஜோய் மீது நம்பிக்கை வைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அட… சே… இன்னுமா உலகம் இதையெல்லாம் நம்புது…

கனடாவைச் சேர்ந்த 24 வயது இவான் இயம்ஸ், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் அஸ்ட்ரோ பிசிக்ஸ் படித்து வருகிறார். கல்லூரிக் கட்டணம் அதிகம். அதைச் சமாளிக்க இவானால் முடியவில்லை. அதனால் பல்கலைக்கழக விடுதியில் அவர் தங்கும் எண்ணத்தைக் கைவிட்டார். கல்லூரிக்கு அருகில் ஒரு பெண்மணியின் வீட்டுத் தோட்டத்தில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்டார். தனக்குக் கணிதமும் இயற்பியலும் கற்றுக் கொடுத்தால், தோட்டத்தில் இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம் என்றார்.

கடந்த 10 மாதங்களாகத் தோட்டத்தில் ஒரு கூடாரம் அமைத்து, தங்கி வருகிறார் இவான். கடுங்குளிர், பனி பொழியும் காலங்களில் மட்டும்தான் சிரமம். மற்றபடி கூடாரம் வசதியாக இருக்கிறது என்கிறார். குளிர் காலத்தில் 3 ஆடைகளைப் போட்டுக்கொண்டு உறங்கிவிடுவார். வீட்டு உரிமையாளர் ஓர் அறையைக் கொடுத்தும், மறுத்துவிட்டார் இவான். படிப்பை முடித்துவிட்டு பாரிஸில் பிஹெச்டி செய்ய இருக்கிறார். அதற்குப் பிறகு நீண்ட நாள் தோழியான மண்டக் என்ற இந்தியப் பெண்ணுடன் திருமணம். ‘‘கூடாரத்தில் வசிப்பவரையா திருமணம் செய்துகொள்ளப் போகிறாய் என்று கேட்கிறார்கள். கூடாரத்தில் வசித்தால் என்ன? புத்திசாலியான இவானுடன் எளிய வாழ்க்கை வாழ்வதே எனக்குப் பிடித்திருக்கிறது’’ என்கிறார் மண்டக்.

எளிய வாழ்க்கையே அழகு!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x