Published : 18 Oct 2019 12:12 PM
Last Updated : 18 Oct 2019 12:12 PM

உலகின் நீண்ட தொலைவு பயணிக்கும் விமானம்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

சிட்னி

உலகின் நீண்ட தொலைவு பயணிக்கும் விமானத்தின் சோதனை ஓட்டம் நியூயார்க் நகரில் இன்று நடக்கிறது.

நியூயார்க் நகரிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு ஏறக்குறைய 20 மணிநேரம் இடைநில்லாமல் இந்த விமானம் பறக்க இருக்கிறது.

குவான்டாஸ் நிறுவனம் இந்த விமானத்தை இயக்குகிறது. நியூயார்க் நகரிலிருந்து இன்று இரவு 9 மணிக்குப் புறப்படும் விமானம் தொடர்ச்சியாக 20 மணிநேரம் வானில் பறந்து சிட்னி நகரைச் சென்றடையும். இதற்காகப் போயின் 767-9எஸ் என்ற விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் நியூயார்க் நகரிலிருந்து சிட்னிக்கும், லண்டனிலிருந்து சிட்னிக்கும் நேரடியான விமானப் போக்குவரத்து தொடங்கும். ஏறக்குறைய 20 மணிநேரம் வானில் இடைநில்லாமல் பறந்து 17 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை இந்த விமானம் கடக்க உள்ளது.

இதுகுறித்து குவான்டாஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலான் ஜோய்ஸ் கூறுகையில், "விமானத்தின் சோதனை ஓட்டத்தோடு பல்வேறு விதமான ஆய்வுகளையும் விமானத்தில் செய்ய இருப்பதால் உற்சாகமாக இருக்கிறோம்.

6 பயணிகள் உள்பட 50 ஊழியர்கள் ஆகியோர் இந்த விமானத்தில் பயணிக்கின்றனர். இதில் பயணிகளாகப் பயணிக்க ஒப்புக்கொண்ட 6 பேரின் தூக்கம், உணவு முறைகள், குடிப்பதற்கு எடுக்கும் பானங்கள் ஆகியவற்றையும், நீண்ட தொலைவு பறப்பதால் அவர்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களையும் ஆய்வு செய்ய இருக்கிறோம்.

பொதுவாக இரவு நேரத்தில் புறப்படும் விமானம் பறக்கத் தொடங்கியவுடன் உணவு வழங்கப்படும், விளக்குகள் அணைக்கப்படும். ஆனால் இந்த விமானத்தில் பயணிகளின் உடலில் உள்ள உயிர்க் கடிகாரம் (பாடிகிளாக்) சூழலுக்கு ஏற்றார்போல் பொருந்த விளக்குகளை அணைக்க மாட்டோம்" எனத் தெரிவித்தார்.

சிட்னியில் உள்ள சார்லஸ் பெர்கின்ஸ் மையம் மற்றும் ஆஸ்திரேலிய அரசின் பாதுகாப்பு, உற்பத்தி, விழிப்புணர்வு ஆய்வு மையம் இணைந்து விமானத்தில் ஆய்வு நடத்துகின்றன. விமானத்தில் பயணிக்கும் பயணிகள், ஊழியர்கள், பைலட் ஆகியோரின் தூக்கநிலை, உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய இருக்கிறார்கள். குறிப்பிட்ட இடைவெளியில் விமானத்தில் பயணிக்கும் ஊழியர்களின் சிறுநீர் மாதிரியும் சேகரிக்கப்பட்டு அதில் உள்ள மெலடோனின் அளவு பரிசோதிக்கப்படும். இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தபின், 2022-ம் ஆண்டுக்குள் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்போன் நகரங்களிலிருந்து லண்டன், நியூயார்க் நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கும்.

தற்போது உலக அளவில் நீண்ட தொலைவு பறக்கும் விமானமாக, சிங்கப்பூரிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் உள்ள நியூயார்க் நகருக்கு இடைநில்லா விமானத்தை 18.5 மணிநேரப் பயணத்தில் இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x