Published : 11 Oct 2019 08:29 PM
Last Updated : 11 Oct 2019 08:29 PM

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி லியோனவ் காலமானார்

மாஸ்கோ

54 ஆண்டுகளுக்கு முன்பாக விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி லியோனவ் ரஷ்யாவில் காலமானார், அவருக்கு வயது 85.

சோவியத் யூனியன் என முன்னர் அழைக்கப்பட்ட ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர் அலெக்சி லியோனவ். விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய மைல்கல்லாக விதந்தோதப்பட்டவர். இவரது தைரியம் பலராலும் பாராட்டுக்குரியதானது. இவர் 1965ம் ஆண்டு வோஸ்கோட் -2 விண்கலத்தை விட்டு வெளியேறி 12 நிமிடங்கள் ஒன்பது வினாடிகள் விண்வெளியில் நடந்து சாதனை படைத்தார்.

விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய வரலாற்று சிறப்புக்குரிய சாதனையை ஏற்படுத்திய அலெக்சி லியோனவ் சமீபகாலமாக உடல்நலக்குறைவால் மாஸ்கோவின் பர்டென்கோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அலெக்சி லியோனோவ் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என அவரது உதவியாளர் தெரிவித்தார்.

மரணமடைந்த அலெக்சி லியோனோவ் ரஷிய ராணுவத்திலும் பின்னர் விமானப்படையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லியோனவ் 1934ம் ஆண்டு மேற்கு சைபீரியாவில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கம்யூனிசத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆட்சியில் இவரது தந்தை எண்ணற்ற விவசாயிகளுடன் குலாக் சிறைமுகாம்களில் அடைக்கப்பட்டார் ஆனால் தந்தையோ அதிலிருந்து மீண்டு வந்து குடும்பத்துடன் இணைந்தார்.

இவர் மறைவுக்கு உலகம் நெடுகிலிருந்தும் இரங்கல்கள், புகழாஞ்சலிகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x