Published : 10 Oct 2019 02:07 PM
Last Updated : 10 Oct 2019 02:07 PM

சர்வதேச எல்லையில் துப்பாக்கிச் சண்டை: பாகிஸ்தான் வீரர் பலி

இஸ்லாமாபாத்,

காஷ்மீர் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பலியானார்.

இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டதில் பாகிஸ்தான் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இரண்டு பெண்கள் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய இந்திய அரசு முடிவு செய்ததை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் கடும் நெருக்கடிக்கு ஆளானது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கோபமாக பதிலளிக்கும்விதமாக இந்திய தூதரை வெளியேற்றியது. அப்போதிருந்து, இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச ஆதரவை திரட்ட பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. ஆனால் அதில் போதிய வெற்றி பாகிஸ்தானுக்கு கிடைக்கவில்லை.

காஷ்மீர் பிரச்சினை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு விஷயம் என்றும், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு வாய்ப்பில்லை என்றும் இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இன்று காலையிலிருந்து இருநாட்டு வீரர்களுக்கும் இடையே பலத்த துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இதனை சர்வதேச எல்லையைக் கடந்து வந்து இந்தியா நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தியதால்தான் பாக். ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பரோ மற்றும் சிரிகோட் செக்டரில் இந்தியா ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு பதிலடி தரும்விதமாக, பாகிஸ்தான் துருப்புக்கள் இந்திய ராணுவத்தை குறி வைத்து தாக்கியதில் கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

இதில் இந்தியத் துருப்புகள் பலியாகினர். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு பகுதி முழுவதும் இந்தியா நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் ஏரானமான மனித இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பாகிஸ்தான் ராணுவ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x