Published : 30 Sep 2019 05:47 PM
Last Updated : 30 Sep 2019 05:47 PM

ஈரானுடன் போர் ஏற்பட்டால் உலகப் பொருளாதாரம் சரியும்: சவுதி

ஈரானுடன் போர் ஏற்பட்டால் உலக அளவில் பொருளாதாரம் சரிந்துவிடும் என்று சவுதி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கூறும்போது, “ எங்கள் பிராந்தியத்திலிருந்து உலகுக்குத் தேவையான 30% எரிபொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஒருவேளை ஈரான் - சவுதிக்கு போர் ஏற்பட்டால் இந்த விநியோகம் அனைத்தும் நிறுத்தப்படும். உலகப் பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும். சவுதி மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளும் பாதிக்கப்படக்கூடும். எனவே ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையே சிறந்தது.

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலை நடத்தியது ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் என்று அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. நாங்கள்தான் நடத்தினோம் என்றால் அதற்கான ஆதாரங்களைக் காட்டுங்கள் என்று ஈரான் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகமானதைத் தொடர்ந்து சவுதிக்கு அமெரிக்கா தனது பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x