Published : 27 Sep 2019 10:29 AM
Last Updated : 27 Sep 2019 10:29 AM

சார்க் நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம்; இந்தியாவின் பேச்சைக் கேட்காமல் வெளியேறிய பாக். அமைச்சர்: ஜெய்சங்கர் பதிலடி

நியூயார்க்

ஐ.நா.வில் நடந்து வரும் 74-வது பொதுக்குழுக் கூட்டத்தின் இடையே நேற்று நடந்த சார்க் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவின் பேச்சைக் கேட்காமல் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி வெளியேறினார்.

இதற்கு பதிலடி தரும்வகையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசி முடித்தவுடன், பாகிஸ்தான் அமைச்சரைச் சந்திக்காமல் அவரது பேச்சைக் கேட்காமல் புறக்கணித்தார்.

ஐ.நா.வில் 74-வது பொதுக்குழுக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் சார்க் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தை சார்க் நாடுகளின் தலைமை நாடான நேபாளம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றார்கள்.

கடந்த 2016-ம் ஆண்டில் காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இந்தியா புறக்கணித்ததால், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளும் தங்கள் பங்கேற்பை ரத்து செய்தன. இந்த சூழலில் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடந்தது.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து, 370-வது பிரிவைத் திரும்பப் பெற்றது போன்றவற்றால் இந்தியா மீது பாகிஸ்தான் கடும் அதிருப்தியுடன் இருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அளவில் எழுப்பி வருகிறது. ஐ.நா.விலும் எழுப்பத் திட்டமிட்டுள்ளது.

இந்த சூழலில் சார்க் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் இந்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுந்து பேச முயன்றபோது, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி கூட்டம் நடக்கும் இடத்தில் இருந்து வெளியேறி எதிர்ப்பு தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது குறித்துக் கூறுகையில், " காஷ்மீரை இறைச்சிக்கடையாக மாற்றுபவர்களுடன் பாகிஸ்தான் பங்கேற்காது" எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது

இந்தக் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், "தீவிரவாதத்தை அனைத்து வழிகளையும் ஒழிப்பதால் மட்டுமே சார்க் நாடுகளுக்கு இடையே இனிமையான கூட்டுறவு இருக்கும். நமது பிராந்தியத்தில் அனைவரும் சிறப்பாக வாழவும் தீவிரவாத ஒழிப்பு முக்கியம். பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு அமைதியையும், வளத்தையும் தர அனைவரும் சேர்ந்து உழைத்தல் அவசியம். தெற்கு ஆசிய செயற்கைக்கோள் திட்டத்தில் அண்டை நாடுகளுக்கு ஏராளமான உதவிகளை அளித்து வருகிறது" எனத் தெரிவி்த்தார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது பேச்சு முடிந்ததும், பாகிஸ்தான் அமைச்சர் குரேஷியின் பேச்சைக் கேட்காமல் அவர் வெளியேறினார்.

இந்தியாவின் பேச்சு முடிந்த பின் நீண்ட நேரத்துக்குப் பின் வந்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி மீண்டும் வந்து கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.


ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x