Published : 25 Sep 2019 06:05 PM
Last Updated : 25 Sep 2019 06:05 PM

 சவுதி செல்லும் ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்ய அதிபர் புதின் அடுத்த மாதம் சவுதி செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் கூறும்போது, “ரஷ்ய அதிபர் புதின் அக்டோபர் சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். இந்தச் சுற்றுப்பயணத்தில் பாதுகாப்பு, இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் இந்த சுற்றுப் பயணத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலை நடத்தியது ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் என்று அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. நாங்கள்தான் நடத்தினோம் என்றால் அதற்கான ஆதாரங்களைக் காட்டுங்கள் என்று ஈரான் தெரிவித்து வருகிறது.

இதன் காரணமாக வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. புதினின் சவுதி பயணத்தில் இது தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x