Published : 24 Sep 2019 05:30 PM
Last Updated : 24 Sep 2019 05:30 PM

கிரெட்டாவை கிண்டல் செய்கிறாரா ட்ரம்ப்? - நெட்டிசன்கள் விமர்சனம்

காலநிலை மாற்றம் குறித்து கிரெட்டா துன்பெர்கின் பேச்சை ட்ரம்ப் கிண்டல் செய்வதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

ஐ.நா.பொதுக்குழுக் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இது வரும் 30-ம் தேதி வரை நடக்கிறது. ஐ.நா.வில் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்து கொண்டார். காலநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க தனியாளாகப் போராடத் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் என்ற 16 வயது சிறுமியும் பங்கேற்றுப் பேசினார்.

இந்நிலையில் கிரெட்டாவின் பேச்சுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், உலகத் தலைவர்களும் பாராட்டி வரும் வேளையில் கிரெட்டாவின் பேச்சைக் குறிப்பிட்டு ட்ரம்ப் தெரிவித்த கருத்து நெட்டிசன்களால் விமர்சனத்துக்கு உள்ளானது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளால் எதிர்காலத் தலைமுறையினர் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கிரெட்டா சற்று கோபத்துடனும், கண்ணீருடனும் வெளிப்படுத்தினார்.

இந்த வீடியோவைக் குறிப்பிட்டு ட்ரம்ப், ''பிரகாசமான மற்றும் அற்புதமான எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கும் மகிழ்ச்சியான பெண் போல் இவர் இருக்கிறார். பார்ப்பதற்கு அருமையாக உள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அப்பெண் காலநிலை மாற்ற பாதிப்பால் எதிர்காலம் குறித்து கண்ணீருடன் பேசும் வீடியோவை ட்ரம்ப் கிண்டல் செய்வதாக நெட்டிசன்கள் விமர்சித்தனர். மேலும் அதிபருக்கு இது அழகல்ல என்றும் பலர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x